உத்திரமேரூரில் நம்ம ஊரு சூப்பரு திட்ட துப்புரவு பணிகள்: கலெக்டர் ஆர்த்தி ஆய்வு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தில் நேற்று மாலை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் துப்புரவு பணிகளை மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுகாதாரம் மற்றும் நீர் மேலாண்மை போன்ற பணிகளை மக்கள் பங்களிப்புடன் மேற்கொள்ளும் வகையில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அதன்படி பொது இடங்கள், பள்ளி, பொது நிறுவனங்கள், பொது கழிவறைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தல், பள்ளி-கல்லூரிகளில் சுகாதாரம், திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை, குப்பைகளை தரம் பிரித்தல் போன்ற பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று மாலை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், உத்திரமேரூர் ஒன்றியத்தில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவு மற்றும் தூய்மை பணிகளை நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தார். மேலும், தானே கையுறை மாட்டிக்கொண்டு துப்புரவு பணிகளில் ஈடுபட்டார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துகுமார், வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: