மாதவரம் பால்பண்ணை அருகே 25 ஏக்கரில் விரைவில் சித்த மருத்துவ கல்லூரி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மாதவரம் பால்பண்ணை அருகே 25 ஏக்கரில் சித்த மருத்துவ கல்லூரி விரைவில் நிறுவப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரேடியோ கதிர் இயக்கவியல் துறையில் தரம் உயர்த்தப்பட்ட மையம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் கட்டமைப்பை உயர்த்தும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. மேலும் ரூ.110 கோடி செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

வரும் ஏப்ரல் மாதம் இந்த புதிய கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். கடந்த ஆண்டு 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் வாயிலாக 1,450 மருத்துவ கல்வி இடங்கள் கிடைத்தது. நடப்பாண்டில் கூடுதல் இடங்கள் கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி வீதம் தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மனு அளிக்க தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் உடல்நலம் பாதித்துள்ளது. அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் தமிழகம் முழுவதும் தயார் நிலையில் இருக்கிறது. சித்த மருத்துவ கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைக்க 25 ஏக்கர் பரப்பில் மாதவரம் பால்பண்ணை அருகே கட்டிடம் கட்ட தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் சித்த மருத்துவக் கல்லூரி அங்கு விரைவில் நிறுவப்படும். தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 96% பேரும், இரண்டாம் தவணையை 90% பேரும் செலுத்தியுள்ளனர். இதேபோல் பூஸ்டர் தடுப்பூசிகளை பொறுத்தவரை, இந்த மாதம் இறுதி வரை இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது. இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டத்திற்கு குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் 2 வாரங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்த மெகா தடுப்பூசி முகாம் இனி வார இறுதியில் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: