தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கூகுள் பே மூலம் பணம் செலுத்தும் வசதி: அமைச்சர் பெரியசாமி தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கூகுள் பே, போன் பே மூலம்  பணம் செலுத்தும்  வசதி விரிவாக்கம் செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி  தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:   மாநிலம் முழுவதும் உள்ள 34,773 நியாயவிலைக் கடைகளில் 33377 நியாயவிலைக்  கடைகள் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. கூட்டுறவு  நியாயவிலைக் கடைகள் மூலம் 2,02,45,357 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள்  விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றில் கிராம பகுதிகளில் 16,994  முழுநேரக் கடைகளும், நகர்ப்புறங்களில் 6,942 கடைகளும் என மொத்தம் 23,936  நியாயவிலைக் கடைகள் முழு நேரக் கடைகளாக இயங்கி வருகின்றன.    கூட்டுறவுத்  துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 33,377 நியாயவிலைக் கடைகளில் 17,473 கடைகள்  அரசு கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. 3,211 கடைகள் சொந்த கட்டிடங்களிலும்  6,981 கடைகள் வாடகை கட்டிடங்களிலும் மற்றும் 5,712 கடைகள் வாடகையில்லா  கட்டிடங்களிலும் இயங்கி வருகின்றன. மாநிலம் முழுவதிலும் உள்ள நியாயவிலைக்  கடைகளில் வாடகைக் கட்டிடங்களில் இயங்கும் 6,907 கடைகளுக்கு புதிய சொந்த  கட்டடம் கட்டுமானம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆண்டொன்றுக்கு 300  கட்டிடங்கள் வீதம் கட்ட திட்டமிடப்பட்டு 862 கடைகளுக்கு அரசு புறம்போக்கு  நிலம் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் 243 நியாயவிலைக் கடைகளுக்கு நிர்வாக  ஒப்புதல் வழங்கப்பட்டு கட்டப்பட்டு வருகின்றன.

மக்களுக்குக் கலப்படமற்ற தரமான பொருட்களை  வழங்கும் விதமாக அரசின் ஊட்டி தேயிலை. அரசு உப்பு, பனை வெல்லம்  உள்ளிட்ட காதி பொருட்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் மலைவாழ்  மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும்  மஞ்சள் தூள், சிறு தானியங்கள், தேன், மிளகு, காபிப்பொடி, சமையல் எண்ணெய்  வகைகள், மாவு வகைகள் மசாலா பொருட்கள். மளிகைப் பொருட்கள், சோப்பு  ஆகியவையும், நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப்  பொருட்கள் உள்ள மூட்டைகளை தரையில் வைப்பதற்கு பதிலாக பாதுகாப்பாக அடுக்கி  வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நியாயவிலைக் கடைகளில் அரிசி,  கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எவர்சில்வர் கொள்கலன்களில் வைத்து  விநியோகம் செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதிலுமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில் 26,272 நியாயவிலைக்  கடைகள் இயங்கி வருகின்றன. அதாவது, ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2  நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, அத்தியாவசியப்  பொருட்களைப் பெறுவதற்கு 2 கி.மீ.க்கு மேல் பொது மக்கள் பயணிக்க  வேண்டிய நிலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதை இலக்காக கொண்டு அரசு  செயல்பட்டு வருகிறது. இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: