படவேட்டம்மன் கோயில் திருவிழா நடத்த சாலையில் உள்ள முள்வேலியை அகற்றி தரவேண்டும்; கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த நத்தப்பேட்டை படவேட்டம்மன் கோயில் அருகே உள்ள சாலையில் கோயில் திருவிழா நடத்த ஏதுவாக தனியாரால் போடப்பட்டுள்ள முள்வேலியை அகற்றி சாலையை மீட்டுத் தரவேண்டும் என அப்பகுதி மக்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆர்த்தியிடம், அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: காஞ்சிபுரத்தை அடுத்த நத்தப்பேட்டை மேட்டுத்தெருவில் படவேட்டம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில், கடந்த 2008ம் ஆண்டு ஊராட்சி மன்ற தலைவர், சாலையின் அருகே உள்ள காலிமனையின் உரிமையாளரிடம் அனுமதி பெற்று ஏற்கனவே உள்ள குறுகிய சாலையை அகலப்படுத்தி பெரிய சிமெண்ட் சாலையாக மாற்றிக் கொடுத்தார்.

இதனை தொடர்ந்து, இந்த காலிமனையை காஞ்சிபுரத்தில் காவலராக பணிபுரியும் ஒருவர் வாங்கியுள்ளார். இவர் அப்பகுதி விஏஓ மூலம் அந்த இடத்திற்கு பட்டா மாற்றி வாங்கினார். மேலும், அந்தச் சாலையை முள்வேலி போட்டு அடைத்து விட்டார். மேலும், கோயிலுக்கு மேல்பூட்டு போட்டு பூட்டிவிட்டார். இதுகுறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேல் பூட்டை உடைத்து வழக்கை ஆர்டிஓ அலுவலகத்துக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். இந்நிலையில், எங்கள் பகுதியில் இறப்பு நிகழ்ந்தால் இறுதி ஊர்வலம் செல்வதற்கு கூட வழியில்லை. மேலும், நாளை திருவிழா நடைபெற உள்ள நிலையில் சாலையில் உள்ள முள்வேலியை அகற்றி சாலையை மீட்டுத் தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: