அரியன்வாயல் அம்மா செட்டி குளத்தில் பருவ மழையில் தண்ணீர் தேங்க நடவடிக்கை; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பொன்னேரி: அரியன்வாயல் பகுதியில் உள்ள அம்மா செட்டி குளத்தை பருவ மழைக்கு முன் சீரமைத்து தண்ணீர் தேங்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன்வாயல் பகுதியில் சுமார் 1 ஏக்கர் பரப்பிளான அம்மா செட்டி குளம் உள்ளது. இந்த குளத்தை கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை இப்பகுதி மக்கள் குளிப்பதற்கும் துணிகள் துவைப்பதற்கும் பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போதும் கூட அதில் கால்நடைகள் தண்ணீர் குடிக்கும் குளமாகவே உள்ளது. இந்நிலையில், தற்போது இந்த குளம் முழுவதும் ஆகாயத்தாமரை வளர்ந்து சேரும் சகதியுமாய் மாறி இருக்கிறது. மேலும் கரைகளில் செடி, கொடிகள் வளர்ந்து விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக மாறி இருக்கிறது.

இந்த குளம் மீஞ்சூர், கேசவபுரம், நாலூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் மழை நீர் வந்து வெளியேறும் பகுதியாகவே உள்ளது. இங்கிருந்து உபரி நீர் வெளியேறி ஆணைமடு, நெய்தவாயல் ஏரிக்கு செல்லும். மேலும் இந்த குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால் இந்த பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன் நீரின் தன்மையும் மாறி சுவையானதாக இருக்கும். சமீபகாலமாக இந்த குளம் பராமரிக்கப்படாததால் நீர் மட்டம் குறைவதுடன் தண்ணீரும் மஞ்சள் நிறமாக மாறி பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த குளத்தை பருவ மழைக்கு முன் ஆகாயத்தாமரை அகற்றி கரைகளை சுத்தப்படுத்து உபரி நீர் வெளியேறும் கல்வெட்டின் உயரத்தை அதிகப்படுத்தி தண்ணீர் தேங்கும் நடவடிக்கையும், உபரி தண்ணீர் வெளியேறும் கால்வாய்களை சீரமைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: