தற்கொலைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் சாணி பவுடர், எலி பேஸ்ட் தடை செய்ய நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

திருவாரூர்: தமிழகத்தில் தற்கொலைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் சாணி பவுடர் மற்றும் எலிபேஸ்ட்களை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதியோர் சிகிச்சை பிரிவு மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம் என ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மாநிலம் முழுவதும் மருத்துவத்துறையில் காலியாக இருந்து வரும் 4 ஆயிரத்து 308 பணியிடங்களை நிரப்புவதற்கு எம்ஆர்பியிடம் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.

நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும். கொரோனா காலத்தில் பணியாற்றிய தற்காலிக செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் 7,448 பேருக்கு புதிய பணியிடம் நிரப்பும்போது கூடுதலாக 20 மதிப்பெண்கள் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த 20 மதிப்பெண்களை கொண்டு இதுபோன்று கொரோனா காலத்தில் பணியாற்றியவர்கள் பணியில் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் தற்கொலைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் சாணி பவுடர் மற்றும் எலி பேஸ்ட்களை தடை செய்வதற்கு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தேசிய அளவிலான பிரச்னை என்பதால், தொழில்துறை செயலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோரை கலந்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாணி பவுடர் மற்றும் எலி பேஸ்ட்டுகளை தனி நபருக்கு விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: