அரசின் உத்தரவுகளை கண்டுகொள்ளாமல் திருத்தணி முருகன் கோயிலில் துணை ஆணையர் மெத்தனம்: பக்தர்கள் குமுறல்

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்கிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திமுக ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் துவங்கியது. இதன்பிறகு அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு ராஜகோபுரம் கட்டுமான பணி மந்தகதியில் நடைபெற்றுவந்தது.

இந்த நிலையில், தற்போது திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர்பாபு பொறுப்பேற்ற பிறகு ராஜகோபுரம் கட்டுமான பணிகள் சுறுசுறுப்படைந்தது. இந்த நிலையில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், எஸ்.சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி ஆகியோர் முதல்முதலாக படிக்கட்டு வழியாக வந்து ஆய்வு செய்தனர். அப்போது ராஜகோபுரத்தில் இருந்து தேர் வீதி வரை படிக்கட்டுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதாவது, சரவண பொய்கை திருக்குளத்தில் இருந்து மலைக்கோயில் வரை ஓராண்டு குறிக்கும் வகையில் 365 படிக்கட்டுக்கள் ஏற்கனவே உள்ளது. இதன் அடிப்படையிலேயே இந்த படிக்கட்டுகள் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் தற்போது இந்த பணிகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. முருகன் கோயிலில் காலை, மாலையில் பக்தர்களுக்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. இங்குள்ள அன்னதானம் கூடத்துக்கு கீழ் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால் சாப்பாட்டில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆடி கிருத்திகை திருவிழாவின்போது கழிவுநீரை அகற்றவேண்டும் என்று பக்தர்கள் கூறியபோது கோயில் ஆணையர் விஜயா நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்தார். இதுகுறித்து அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான கோட்ட ஆறுமுகசாமி கோயில், விஜயராகவபெருமாள் கோயில், வீராட்சீஸ்வரர் ஆகிய கோயில்களில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தபோது கோயில் பெயர் பலகை வைக்கவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இவற்றை உடனடியாக நிறைவேற்றவேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டபின்னரும் பெயர் பலகை வைத்தப்பாடில்லை. இதுமட்டுமின்றி கோயில் வளாகத்திற்கு செல்லும் வழி இருளாக உள்ளதால் பக்தர்கள் அச்சப்படுகின்றனர். நேற்று கோயில் வளாகத்தில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால் இருட்டாக இருந்ததால் கோயிலுக்கு பக்தர்கள் கடும் அச்சத்துடன் வந்து சென்றனர்.

இதுசம்பந்தமாக எந்த புகார் கொடுத்தாலும் யார் சொன்னாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. எனவே, பக்தர்கள் கோரிக்கை மீது தொடர்ந்து அலட்சியம் காட்டிவரும் கோயில் துணை ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: