டிக்கெட் பரிசோதகர்களுக்கு வேலை எளிது; கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் டிஜிட்டல் சார்ட் முறை அறிமுகம்: சீட் ஒதுக்கீட்டில் கோல்மால் செய்ய முடியாது

நாகர்கோவில்:  கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில், டிஜிட்டல் சார்ட் முறை அறிமுகமாகி உள்ளது. இதன் மூலம் வராத பயணிகளை எளிதில் அடையாளம் காண முடியும். இந்திய ரயில்வே துறையில் சுமார் 13 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். ஆண்டுக்கு குறைந்த பட்சம் 500 கோடி பயணிகள் பயணிக்கிறார்கள். ரயில்வே துறையில் படிப்படியாக பல்வேறு மாற்றங்களை ஒன்றிய அரசு செய்து வருகிறது. பொதுத்துறை நிறுவனமாக உள்ள இந்திய ரயில்வே துறையை, தனியாருக்கு கொடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

இது தவிர செலவுகளை குறைக்கும் வகையில் காகித பயன்பாடுகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் டிஜிட்டல் முறையில் பயணிகள் பயண பட்டியல் (சார்ட்) தயாரிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரயிலில் பயணசீட்டு பரிசோதகர்களுக்கு கையடக்க சாதனம் (டேப் லெட்) வழங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்துக்கு முதற்கட்டமாக 140 டிஜிட்டல் டேப் லெட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நாகர்கோவில் டெப்போவுக்கு 20 டிஜிட்டல் டேப் லெட்டுகள் முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது  கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ், கொல்லம் - சென்னை எழும்பூர் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட  ரயில்களில் இது அமல்படுத்தப்பட்டுள்ளது. வெகுவிரைவில் இது அனைத்து ரயில்களிலும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த திட்டம் அனைத்து ரயில்களிலும் செயல்படுத்தும் போது சார்ட் பிரிண்ட் எடுத்து பயன்படுத்தும் காகிதம் பயன்பாடு வெகுவாக குறையும் என்று அதிகாரிகள் கூறினர்.

டிஜிட்டல் முறையில் பயணிகளின் அட்டவணை சரிபார்க்கும் முறை அமல்படுத்துவதால் ரயிலில் இருக்கைகள் காலி விவரங்கள் இணையதளத்தில் அவ்வப்போது அப்டேட் செய்யப்படும். இதனால் பயணிகள் ரயிலில் முன்பதிவு இருக்கைகள் விவரத்தை பார்த்து முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு சில பயண சீட்டு பரிசோதகர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு காத்திருப்போர் பட்டியலில் முன்னுரிமை அடிப்படையில் வழங்காமல் வேண்டப்பட்ட பயணிகளுக்கு பயண சீட்டு ஒதுக்கீடு செய்வதும் முற்றிலும் தவிர்க்கப்படும். இந்த திட்டத்தை அமல்படுத்தும் போது பயணசீட்டு பரிசோதகர்களின் பணி எளிதாகின்றது.

இதனால் இனி பயணச்சீட்டு பரிசோதகர்கள் குறைந்த நேரத்தில் அதிக அளவில் பயணிகளை பரிசோதனை செய்ய முடியும். இவ்வாறு செய்வதால் இரவு நேரங்களில் தூங்கும் பயணிகளை பரிசோதனை செய்கிறோம் என்று கூறி தொந்தரவு செய்யும் நிலையும் இருக்காது என பயணிகள் கூறினர். பயணசீட்டு பரிசோதகர்கள் ஒரு பயணி வரவில்லை என்றால் காலியாக உள்ள அந்த இருக்கையை மற்றொரு பயணிக்கு ஒதுக்குவதற்கு முன், அடுத்த முக்கிய நிலையங்களை ரயில் கடக்கும் வரை காத்திருந்து பின்னர் பயணி வரவில்லை என்று ஒன்றுக்கு, இரண்டு முறை உறுதி செய்துவிட்டு ஆர்ஏசி அல்லது காத்திருப்போர் பட்டியிலில் உள்ள பயணிக்கு அந்த இருக்கை ஒதுக்கீடு செய்து வந்தனர்.

இனி இது போன்று பயணசீட்டு பரிசோதகர் களால் செய்ய முடியாது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவிலிருந்து முன்பதிவு செய்துள்ள ஒரு பயணி தவிர்க்க முடியாத காரணத்தால் ரயிலை தவற விட்டு விட்டு, சாலை மார்க்கமாக காரில் வள்ளியூர் ரயில் நிலையம் சென்று ரயிலில் ஏறலாம் என்றால் இனி முடியாது. நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் புறப்பட்டதும் பயணசீட்டு பரிசோதகர் வந்து சுமார் ஐந்து நிமிடத்திற்குள் பயணிகள் விவரங்களை சரிபார்த்து டிஜிட்டல் டேப் லெட்களில் பதிவு செய்து விடுவார். ஏதாவது பயணி வராமல் இருந்தால் வரவில்லை என்று குறித்து விட்டு ஆர்ஏசி அல்லது காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிக்கு அந்த இருக்கை ஒதுக்கீடு செய்யப்படும். இது போன்ற பிரச்னைகளை தவிர்க்க போர்டிங் பாயின்ட் முன்கூட்டியே தீர்மானித்து மாற்றி கொண்டு பயணிப்பது சிறப்பாக அமையும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: