நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்: கோயில்களில் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு: அனுமதிக்கப்பட்ட சாலைகளில் பொதுமக்கள் வழிபட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

சென்னை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திவிழா விமர்சையாக  கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே விநாயகர் கோயில் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பூஜை பொருட்களை வாங்க மயிலாப்பூர், கோயம்பேடு, புரசைவாக்கம், தி.நகர், திருவான்மியூர், பிராட்வே, ராயபுரம், தாம்பரம், வடபழனி, ஜாம்பஜார், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் காலை முதல் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

விலை அதிகமாக இருந்த போதிலும் அதுபற்றி பொருட்படுத்தாமல் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்திக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். பூ, பழங்கள் விலை இரண்டு மடங்காக அதிகரித்து காணப்பட்டது. மல்லிகைப் பூ கிலோ ரூ200ல் இருந்து நான்கு மடங்காக உயர்ந்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. முல்லை, ரூ200ல் இருந்து ரூ500க்கும், கனகாம்பரம் கிலோ ரூ1500க்கும், பன்னீர் ரோஜா ரூ100லிருந்து ரூ140, சாக்லேட் ரோஜா ரூ200க்கும், சாமந்தி பூ ரூ200, செவ்வந்தி ரூ200 முதல் ரூ350 வரையிலும், அரளிப்பூ ரூ250க்கும் விற்பனை செய்யப்பட்டது. கரும்பு (ஒன்று) ரூ20, பொரி ஒரு படி ரூ20. அவல், உடைத்த கடலை, நாட்டு சர்க்கரை கொண்ட சிறிய பாக்கெட் ரூ10க்கும், சிறிய வகையிலான வாழை மரம் கட்டு ரூ70 முதல் ரூ100 வரையிலும், வாழைத்தார் ரூ400 முதல் ரூ800 வரையிலும் சைஸ்க்கு ஏற்றார் போல் விற்பனை செய்யப்பட்டது.

அது மட்டுமல்லாமல் சிறிய அளவில் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் அவரவர் விருப்பத்திற்கு ஏற்றப்படி விநாயகர் சிலைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். சிறிய சிலைகள் ரூ50 முதல் ரூ2000 வரையில் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் விநாயகர் சிலைக்கு வைக்கும் பல வண்ணங்களான குடைகள், எருக்கம்பூ விற்பனையும் அமோகமாக நடந்தது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சென்னையில் மட்டும் 2500 சிலைகள் வைக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் விழாக்குழுவினர் சிலைகளை வைத்துள்ளனர். அங்கு பொதுமக்கள் வழிபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் பொது இடங்களில் பூஜிக்கப்பட்ட சிலைகள் 4 நாட்கள் கழித்து கடற்கரை பகுதிகளில் கரைப்பது வழக்கம். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

Related Stories: