உயர் நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் சசிகலா, தினகரனை அதிமுக கட்சியில் சேர்ப்பதில் ஓபிஎஸ் உறுதி: எடப்பாடி அணியினர் கடும் எதிர்ப்பு

சென்னை: உயர் நீதிமன்ற தீர்ப்பு எப்படி வந்தாலும் சரி, சசிகலா, டி.டி.வி.தினகரனை அதிமுக கட்சியில் சேர்ப்பதில் ஓபிஎஸ் உறுதியாக உள்ளார். இதற்கு எடப்பாடி அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் விரைவில் தீர்ப்பை வெளியிட உள்ளது. இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரிய குளத்துக்கு சென்று தங்கி உள்ளார். அங்கு அவர் தனது ஆதரவாளர்களை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.  அதேநேரம், அதிமுக கட்சியை கைப்பற்றுவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் தனது சொந்த ஊரில் ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை அதிமுக கட்சியில் இணைத்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். இதில் அவர் உறுதியாக இருக்கிறார். அதனால், கடந்த சில மாதங்களாக, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்ப வேண்டும் என்றும், அதிமுக கட்சியின் சட்டதிட்டங்களை ஏற்றுக்கொள்ளும் யார் வேண்டுமானாலும் கட்சியில் இணைந்து செயல்படுவதில் தவறு இல்லை என்று ஓபிஎஸ் தொடர்ந்து கூறி வருவது குறிப்பிடத்தக்கது. சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணையும் பட்சத்தில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களையும் அதிமுக கட்சிக்குள் கொண்டு வர ஓபிஎஸ் திட்டமிட்டு வருகிறார். எனவே சசிகலாவையும், டி.டி.வி தினகரனையும் விரைவில் சந்தித்து பேச ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில் சில தினங்களுக்கு முன் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா அனுப்பிய தூதர் ஒருவர் சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

சசிகலாவின் ஆதரவாளரும், மகளிர் அணியின் முக்கிய பிரமுகருமான அந்த பெண் ஓ.பன்னீர்செல்வத்துடன் சசிகலாவின் வியூகங்கள் குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் அதற்கு ஏற்றபடி செயல்பட வேண்டும் என்று சசிகலா தூதருடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் சசிகலா, டி.டி.வி.தினகரனை அதிமுக கட்சியில் இணைப்பது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரடியாக சுற்றுப்பயணம் செய்து ஆலோசனை நடத்தவும் முடிவு செய்துள்ளது. அதேநேரம், அதிமுக கட்சியில் மீண்டும் சசிகலாவை, டி.டி.வி.தினகரன் ஆகியோரை சேர்ப்பதில் எடப்பாடி பழனிசாமி அணியினர் விரும்பவில்லை. சசிகலா அதிமுக கட்சிக்குள் வந்தால், மீண்டும் அவரிடம் கைகட்டி நிற்கும் நிலை ஏற்படும் என்பதால், ஓபிஎஸ் திட்டத்தை முறியடிக்க எடப்பாடி அணியினர் முயற்சி செய்து வருகிறார்கள். அதனால்தான், அதிமுக கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி வைத்துள்ளோம் என்று எடப்பாடி அணியினர் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி சில தினங்களுக்கு முன் கூறும்போதுகூட, சசிகலா, டி.டி.வி.தினகரனை அதிமுக கட்சியில் இருந்து நீக்கிய பிறகுதான் எடப்பாடி - ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து செயல்பட்டனர். இப்போது, மீண்டும் சசிகலாவை அதிமுக கட்சியில் சேர்க்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். அதனால்தான், ஓபிஎஸ்சை அதிமுக கட்சி நிர்வாகிகள் ஓரங்கட்டியுள்ளனர் என்று கூறினார். இதே கருத்தை பலரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனாலும் ஓபிஎஸ் தனது கருத்தில் உறுதியாக இருக்கிறார். ஒன்றுபட்ட அதிமுகவுக்கே பாஜ மேலிடம் ஆதரவு அளிக்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இதனால், பெரியகுளத்தில் தங்கி இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்து பூஜைகள் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள நம்பூதிரிகள் மூலம் மிகப்பெரிய யாகங்களை நடத்தி வருவதாக சொல்கிறார்கள். அதிமுக பொதுக்குழு வழக்கில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த சிறப்பு பூஜைகளை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மேற்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலாவுடன் கைகோர்க்க ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாகி விட்டதால் அவர்களது கை ஓங்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதை தடுப்பதற்காக எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறார்கள்.

அவர்களும் அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பைத்தான் ஆர்வமாக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள்.தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்தால் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இல்லையெனில் மீண்டும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்து, அதிமுக கட்சியை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்வார் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகும் தீர்ப்பு அதிமுகவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Related Stories: