சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம்

சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையார்பட்டியில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 10ம் நாளான நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் தங்கக்கவச அலங்காரத்தில் காட்சியளித்தார். காலை 10 மணியளவில் விநாயகர் தங்க மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சப்பரத்திலும் கோயில் குளத்தின் முன்பு எழுந்தருளினர். பின்னர் குளத்தின் படிக்கட்டில் அங்குசதேவருக்கு பால், மஞ்சள், சந்தனம், தயிர் என 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. தொடர்ந்து விநாயகர் திருவீதி உலா நடந்தது. மதியம் உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 18 படி அரிசியால் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தென் கைலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு கஜ பூஜையுடன் துவங்கியது. விநாயகர் சதுர்த்தியான நேற்று மாணிக்க விநாயகருக்கும், உச்சிப்பிள்ளையாருக்கும் 150 கிலோ எடை கொண்ட மெகா கொழுக்கட்டை படையலிட்டு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. இதற்காக கோயில் மடப்பள்ளி பணியாளர்கள் பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், ஜாதிக்காய், எள், நெய், தேங்காய் ஆகியவற்றை கலந்து, பின்னர் இரு பங்காக பிரித்து துணியில் கட்டி பெரிய பாத்திரத்தில் வைத்து தொடர்ந்து 18 மணி நேரம் அவித்தனர். இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் தாயுமான சுவாமி கோயிலில் உச்சிப்பிள்ளையார் மற்றும் மலையின் கீழ் உள்ள மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோ எடையிலான 150 கிலோ கொழுக்கட்டை தயார் செய்யப்பட்டது. மாணிக்க விநாயகருக்கு படைக்கப்பட்ட பின், தொட்டிலில் வைத்து சுமந்து உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு எடுத்துச்சென்று நிவேதனம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு படைக்கப்பட்ட பிரமாண்ட கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

Related Stories: