அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் ஒரேநாளில் 400 டன் குப்பை அகற்றம்

பூந்தமல்லி: அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் பொன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான காலி மனையில் கொட்டப்படுகிறது. உணவுக் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், எதற்கும் பயன்படாத குப்பைக்கழிவுகள் என இந்த குப்பை மலைபோல் குவிந்துள்ளது. குப்பை கொட்டப்பட்டும் காலி மனையை சுற்றி ஏராளமான குடியிருப்புகள், மருத்துவமனைகள்  கடைகள், வீடுகள் உள்ளன. இந்த குப்பைக் கழிவுகளிலிருந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அந்தப்பகுதியில் சுகாதாரசீர்கேடு மற்றும் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படுவதாக அந்தப் பகுதி மக்கள் மாவட்ட மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவதினகரன் அறிவுறுத்தலின்பேரில் அய்யப்பன்தாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஜெமீலா பாண்டுரங்கன் மேற்பார்வையில் இந்தப்பகுதியிலிருந்து குப்பைகள் அகற்றும் பணி நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெமீலா பாண்டுரங்கன் கூறியதாவது: அய்யப்பன் தாங்கல் ஊராட்சியை குப்பையில்லாத சுகாதாரமான ஊராட்சியாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இங்குள்ள குப்பைகள் அகற்றி ஒரகடத்தை அடுத்துள்ள ஆப்பூர் குப்பை கிடங்குக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. நேற்று ஒரேநாளில் சுமார் 400 டன் குப்பைகள் 10க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்டது என்றார். இந்த குப்பை அகற்றும் பணியினை ஊராட்சி தலைவர் ஜெமீலா பாண்டுரங்கன், துணைத்தலைவர் எஸ்.வி.எஸ். முருகதாஸ், மாவட்ட பிரதிநிதி பாண்டுரங்கன், ஒன்றிய கவுன்சிலர்கள் லோகநாயகி சாமிநாதன், உஷாநந்தினி எத்திராஜ், ஊராட்சி செயலர் கோதண்டராமன், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

Related Stories: