பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் சன் பவுண்டேஷன் நிதி உதவி மூலம் ரூ.4.30 கோடியில் ஆராய்ச்சி வளாகம்

சென்னை: சன் பவுண்டேஷன்  நிதியுதவியால் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில்  கட்டப்பட்ட ஆராய்ச்சி வளாகத்தை மல்லிகா மாறன் திறந்து வைத்தார். முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் நினைவாக, ஏழை எளியோரின் கல்வி, மருத்துவ சிகிச்சை, சமூக மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. பல்வேறு அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன.  அதன் ஒரு பகுதியாக, சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரியில்  அறிவியல் மற்றும் கணினி தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக பரிசோதனைக் கூடம் கட்டுவதற்கு சன் பவுண்டேஷன் ரூ.4.30 கோடி நிதி உதவி அளித்தது. இதன் மூலம், அக்கல்லூரியில் மூன்று மாடிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. முரசொலி மாறன் அறிவியல் மற்றும் தகவலியல் ஆராய்ச்சி வளாகம் என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தை மல்லிகா மாறன் திறந்து வைத்தார்.

காவேரி கலாநிதி மாறன், கல்லூரி முதல்வர் லில்லியன் ஐ. ஜேஸ்பர், நிர்வாகிகள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதுகலை பட்டப்படிப்பு மாணவிகளுக்காக அமைக்கப்பட்ட இந்த வளாகத்தின் மூலம் இயற்பியல், வேதியியல் மற்றும் தகவலியல் துறை மாணவிகள் செயல்முறை பயிற்சி மேற்கொள்ளவும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கல்லூரி நிர்வாகத்தினரும் பேராசிரியர்களும் தெரிவித்தனர். ஏழை எளியோருக்கு கல்வி, அடிப்படைக் கட்டமைப்புகள் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல், தரமான இலவச சிகிச்சை, மகளிர் மற்றும் இளைஞர் நலன், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்ட நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக சன் டிவியும் சன் பவுண்டேஷனும் தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகின்றன. இத்திட்டங்களுக்காக சன் பவுண்டேஷன் மற்றும் சன் டி.வி. இணைந்து இதுவரை 160 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: