கோயில் மேம்பாட்டு பணிகளை வேகமாக முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுரை

சென்னை: கோயில்களின் மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் கோயில்களில் நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும், சட்டமன்ற அறிவிப்புகளின்படி நிறைவேற்றப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில்  2021-22 மற்றும் 2022-23ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக்கோரிக்கை அறிவிப்புகளின்படி சோளிங்கர்  லட்சுமி நரசிம்மசுவாமி கோயிலில் அமைக்கப்பட்டு வரும் கம்பிவட ஊர்தி (ரோப் கார்) மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள், மனநலக் காப்பகம் அமைக்கும் பணிகள், சின்னமலை யோக ஆஞ்சநேயர் கோயில் பணிகள் குறித்தும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நிர்வாக பயிற்சி மையம், திருமண மண்டபம் கட்டுமானப் பணிகள், புதிய மாற்றுப் பாதை அமைத்தல், சரவண பொய்கை குள திருப்பணி, ராஜகோபுரத்தை தேர்வீதியுடன் இணைக்கும் பணிகள், தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி, அன்னதான திட்ட செயல்பாடுகள் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வடபழனி ஆண்டவர் கோயிலில் அன்னதானக் கூடம், முடிகாணிக்கை மண்டபம்குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டதோடு, இப்பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், பொறியாளர்களும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் சேகர்பாபு அறிவுரை வழங்கினார்.

Related Stories: