கொடுங்கையூர் கிடங்கில் நவீன முறையில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை; சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு

சென்னை: சைதாப்பேட்டையில் கலைஞருக்கு முழு உருவச்சிலை அமைக்கப்படும். கொடுங்கையூர் கிடங்கில் நவீன முறையில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. சென்னை மாநகராட்சி கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று காலை நடந்தது. கூட்டத்திற்கு மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும்  தீண்டாமை உறுதிமொழியை உறுப்பினர்கள் எடுத்து கொண்டனர். தொடர்ந்து கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சிய வளாகத்தில் காந்தியடிகள் திருவுருவச் சிலை வைக்கப்படும். சென்னை மாநகராட்சி  பள்ளிகள் சுத்தம் செய்ய ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மூலக்கொத்தளம் மயானத்தில் எரிவாயு தகன மேடை அமைக்கப்படும். மாநகராட்சியின் வரி வருவாயை பெருக்குவதற்காக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 1 முதல் 15 வரை உள்ள மண்டலங்களில் வணிக வளாக கடைகளில் உபயோகப்படுத்தக்கூடிய, ஏலம் விட தகுதியுள்ள 117 கடைகள் காலியாக உள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கடைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் மெகா ஏலம் விடப்படும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  மருத்துவமனைகளில் 6 இடங்களில் ரத்த சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு  வருகிறது. கூடுதலாக இளங்கோவன் நகர், அம்பத்தூர் பாடி, செம்மஞ்சேரி ஆகிய 3  இடங்களில் ரத்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். பள்ளிகளின் பழமையான கட்டிடங்கள் குறித்து ஆய்வு  செய்யப்பட்டது.

அதில் பாடசாலை தெருவில் உள்ள துவக்க பள்ளி, எஸ்.எம்.நகர்  சி.கல்யாணபுரம் மேல்நிலைப்பள்ளி, கணேசபுரம் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி  கட்டிடங்கள் இடிக்கப்படும் உள்ளிட்ட 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது கவுன்சிலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பினர். 10வது வார்டு குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “சைதை தொகுதி 10வது மண்டலத்திற்கு உட்பட்ட 142 வார்டு பஜார் சாலை மற்றும் அண்ணா சாலை சந்திக்கும் இடத்தில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு முழு உருவச்சிலை அமைக்க அனுமதிக்க வேண்டும்” என்றார். அதை ஏற்று கலைஞர் முழு உருவச்சிலை அமைக்க மன்ற கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது. 37வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் டெல்லி பாபு பேசுகையில், “கொடுங்கையூர் குப்பை கிடங்கால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

குப்பைகளை அகற்ற எரியூட்டும் போது, அதனால் ஏற்படும் புகையால் அப்பகுதியில் உள்ள மக்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பயோமைனிங் முறையில் குப்பைகளை அகற்ற டெண்டர் விடப்பட்டது. அதன் தற்போதைய நிலை  என்ன?” என்றார். இதற்கு பதில் அளித்து மேயர் பிரியா பேசுகையில், “கொடுங்கையூர் குப்பை கிடங்கில் குப்பைகளை  அகற்றுவது தொடர்பாக தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது. ஜனவரி 10ம் தேதி இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது. பயோமைனிங் முறையில் குப்பைகளை அகற்றுவதற்கு இறுதி அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அதற்கான விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இது தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. 3 மாதத்திற்குள் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்” என்றார்.

Related Stories: