திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குளத்தின் மதிற்சுவரை மேம்படுத்தும் பணி; முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார்

திருப்போரூர்: ரூ.27 லட்சம் செலவில் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குளத்தின் மதிற்சுவர் மேம்படுத்தும் பணியை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார்.  திருப்போரூர் கந்தசுவாமி கோயிலையொட்டி சரவண பொய்கை எனப்படும் திருக்குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் மதிற்சுவர் மற்றும் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கோயில் மதிற்சுவர் பழமையாக இருந்ததை பார்வையிட்டார்.

இதையடுத்து, நவீன முறையில் கோயில் கோபுரங்கள் மற்றும் சிற்பங்கள் இருப்பது போன்று குளத்தின் சுற்றுச்சுவரை மேம்படுத்த முடிவு செய்து, கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான பல்வேறு திட்டப்பணிகளை காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அந்தவகையில், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நடந்த விழாவுக்கு, மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்தி காந்த பாரதிதாசன் தலைமை தாங்கினார்.

கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார். தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டப்பணிகளை துவங்கி வைத்தவுடன், காஞ்சிபுரம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, ₹26 லட்சம் மதிப்பில் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் குளத்தின் சுற்றுச்சுவர் மேம்படுத்தும் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ், துணை தலைவர் இரா.பரசுராமன், பேரூராட்சி உறுப்பினர்கள் பரணிதரன், மீனா சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கந்தசுவாமி கோயில் மேலாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

Related Stories: