விழுப்புரத்தில் பயங்கரம் இளம்பெண் தலையை துண்டித்து காவல்நிலைய பாத்ரூமில் வீச்சு: உடலை தேடுகிறது போலீஸ்

விழுப்புரம்: விழுப்புரம் நகர காவல் நிலைய பாத்ரூமில் இளம்பெண் தலையை வீசிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  விழுப்புரம் நகர காவல் நிலையம் பின்புறம் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள் நேற்று மாலை சிறுநீர் கழிக்க வந்த போது காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள பகுதியில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தலை எரித்த நிலையில், துண்டிக்கப்பட்டு கிடந்ததையும், தனியாக முடிகள் கொட்டி கிடந்ததையும் பார்த்துவிட்டு பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், அந்த பாழடைந்த பாத்ரூமில் கிடந்த தலையை கைப்பற்றினர். ஒரு அடி தள்ளி பெண்ணின் நீள தலைமுடி கிடந்ததையும் மீட்டனர். காவல் நிலையம் அருகே வீசப்பட்ட இளம்பெண்ணின் தலை யாருடையது என்பது தெரியவில்லை. மேலும் போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இங்கு வீசிவிட்டு சென்றார்களா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. சுமார் 15 தினங்களுக்கு முன்பு கழுத்தறுக்கப்பட்டு இருக்கலாம் என்று விசாரணையில் கூறப்படுகிறது. யாரேனும் இளம்பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு கழுத்தை துண்டித்து வீசி விட்டு சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே குடியிருப்பில் சிறுவன் ஒருவன் பிச்சை எடுக்கும் பெண்ணை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துள்ளான். இறந்து போன பிச்சைக்காரி யார் என்பது தெரியவில்லை. அடையாளம் காண்பதற்காக அவரின் தலையை மீட்டு காவல் நிலையத்தில் வைத்திருந்ததாகவும், எதிர்பாராத விதமாக நாய்கள் இழுத்து சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். அதேபோல் அதே காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்ட 2 வயது சிறுமி தலையாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்தனர்.

ஆனால் ரயில்வே குடியிருப்பில் நடந்த கொலை சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் வயது 40.  ஆனால் தற்போது மீட்கப்பட்ட இளம்பெண் தலை தோரயமாக 20 வயது இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. போலீசாரின் இந்த மாறுபட்ட தகவலால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்  நகர போலீசார், இறந்த இளம்பெண்ணின் உடலை தேடும் பணியில் தீவிரமான ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: