மழையால் பாகிஸ்தான் மக்கள் பாதிப்பு; தக்காளி கிலோ ரூ.500 வெங்காயம் ரூ.400.! இந்தியாவில் இறக்குமதி செய்ய ஆலோசனை

லாகூர்: பாகிஸ்தானில் பெய்துவரும் மழையால் விலைவாசி கடுமையாக உயர்ந்த நிலையில் தக்காளி கிலோ ரூ.500 ஆகவும், வெங்காயம் கிலோ ரூ. 400 ஆகவும் விற்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து காய்கறி இறக்குமதி செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் வரலாறு காணாத கடுமையான மழை பெய்து வருவதால் 1,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். கிட்டத்தட்ட 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டள்ளனர். லாகூர், பஞ்சாப் உள்ளிட்ட சில மாகாணங்களில் கனமழை பெய்ததால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

கடுமையான மழை, வெள்ளம் காரணமாக பாகிஸ்தானில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து லாகூர் சந்தையின் மொத்த வியாபாரி ஜவாத் ரிஸ்வி கூறுகையில், ‘லாகூர் சந்தைகளில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை முறையே கிலோ ஒன்றுக்கு ரூ.500 மற்றும் ரூ.400 என்ற அளவில் விற்கப்படுகிறது. பலுசிஸ்தான், சிந்து, தெற்கு பஞ்சாப் பகுதிகளில் காய்கறிகள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வெங்காயம், தக்காளி விலை கிலோ 700 ரூபாயை தாண்டும்.

அதேபோல உருளைக்கிழங்கு கிலோ ரூ.40ல் இருந்து ரூ.120 ஆக உயர்ந்துள்ளது’ என்றார். அண்டை நாடான பாகிஸ்தானில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், வாகா எல்லை வழியாக இந்தியாவில் இருந்து வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளை இறக்குமதி செய்ய அந்நாடு ஆலோசித்து வருகிறது. தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து டோர்காம் எல்லை வழியாக தக்காளி மற்றும் வெங்காயம் சப்ளை செய்யப்படுகிறது என்று லாகூர் மார்க்கெட் கமிட்டி செயலாளர் ஷாஜாத் சீமா கூறினார்.

Related Stories: