திடீர் மழை, சூறைக்காற்று சென்னை ஏர்போர்ட்டில் விமான சேவை பாதிப்பு

சென்னை: மழை, சூறைக்காற்றால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிப்பு தொடர்கிறது. இதன் காரணமாக, சிங்கப்பூர் விமானம் தரையிறங்க முடியாமல் நேற்று பெங்களூரு திரும்பி சென்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மதியம் திடீரென சூறைக்காற்றுடன் சுமார் அரை மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக  சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ஓரளவு பாதிக்கப்பட்டன.நேற்று பகல் 1.50 மணி அளவில்  சிங்கப்பூரில் இருந்து 178 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள்  விமானம், சூறைக்காற்று, மழை காரணமாக சென்னையில் தரையிறங்க  முடியாமல், சிறிது நேரம் வானில் வட்டமடித்தது. அதன் பின்பு அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

அதேபோல் ராஜமுந்திரி, விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் இருந்து வந்த 3 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்களும், சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டிருந்தன.  இதுபோல சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சார்ஜா, சூரத், கோவை, கண்ணூர், தூத்துக்குடி ஆகிய 5 விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. பின்னர் பகல் 2.30 மணிக்கு மேல் மழை, சூறைக்காற்று ஓய்ந்ததும், வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த 3  விமானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சென்னையில் தரையிறங்கின. பெங்களூருக்கு சென்ற விமானம், மாலை 3 மணி அளவில் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது. சென்னை விமான நிலையத்தில் சூறைக்காற்று, மழை காரணமாக தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களாக விமான சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகி வருவது தொடர்கிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories: