மீன்களுடன் படகையும் பறிமுதல் செய்ததால் அதிர்ச்சி: ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது

ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். மீன்களுடன், படகையும் பறிமுதல் செய்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுக கடற்கரையில் இருந்து 450க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர்.

இதனால் அச்சமடைந்த மீனவர்கள் படகுகளை உடனடியாக அங்கிருந்து வேறு பகுதிக்கு ஓட்டி சென்றனர். திரும்பி சென்ற படகுகளை விடாமல் துரத்தி வந்த இலங்கை கடற்படையினர், ஒரு விசைப்படகை வழிமறித்து சிறைபிடித்தனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த படகு உரிமையாளர் நிஷாந்தன் (38) மற்றும் படகில் இருந்த மீனவர்கள் ஆண்டி (58), கருணாநிதி (46), உலகநாதன் (50), சூசைவியாகுலம் (35), சேசு ஆகியோரை சிறைபிடித்தனர். மீன்களுடன் படகும் பறிமுதல் செய்யப்பட்டது.

தலைமன்னார் கடற்படை முகாமில் மீனவர்கள் 6 பேரிடமும் கடற்படை உயர் அதிகாரிகள் விசாரணை செய்தனர். இதன்பிறகு இலங்கை கடல்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.  இவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். மீனவர்கள் சிறைபிடிப்பை கண்டித்து ராமேஸ்வரத்தில் இன்று ஒருநாள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Related Stories: