தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தை மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை: முதல்வர் உறுதி அளித்ததாக விஜய் வசந்த் எம்பி பேட்டி

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று, காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் தலைமையில் எம்எல்ஏ ராஜேஷ்குமார், கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை, தூத்தூர் மண்டல பாதிரியார் பெபின்சன் உள்ளிட்டோர் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு மறு சீரமைப்பு பணியை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தொடங்க வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.  இந்த கோரிக்கை சம்பந்தமாக முதல்வரை வலியுறுத்தினர். இதை தொடர்ந்து, விஜய் வசந்த் நிருபர்களிடம் கூறியதாவது:தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் கட்டமைப்பு மறு சீரமைப்பு தொடர்பாக முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை கேட்ட அவர்,ரூ.253 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட துறைமுக கட்டுமான பணிகள் உடனடியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அதேபோன்று தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் தாமிரபரணி ஆறு கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளதால் மணல் திட்டுகள் உருவாகிக் கொண்டே இருக்கிறது. அதை அகற்றுவதற்கு ஏதுவாக மணல் அள்ளும் இயந்திரம் ஒன்று நிரந்தரமாக தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருப்பதற்கு வேண்டுகோள் வைத்தோம். அதையும் செய்து தருவதாக முதல்வர் உறுதி அளித்தார்.  மேலும் இரையுமன் துறை மீன கிராமத்தை கடல் அரிப்பிலிருந்து நிரந்தரமாக பாதுகாப்பதற்கு தொடர் தூண்டில் வளைவுகள் அமைக்கரூ.30 கோடிக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு நபார்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை துரிதப்படுத்தி பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்தார்.

Related Stories: