பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்கள் பங்கேற்பு கேளம்பாக்கம் தனபாலன் கல்லூரியில் நானோ வடிவமைப்பு கருத்தரங்கம்

சென்னை: சென்னை அருகே கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பேராசிரியர் தனபாலன் கலை அறிவியல் கல்லூரியில் உயிரியல் மருத்துவ சிகிச்சையின் அணுகுமுறையில் நானோ வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் 2022 என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் ஸ்ரீதேவி புகழேந்தி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் பியூலா பத்மாவதி வரவேற்றார். சென்னைப் பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கின் முதல் அமர்வில் பசுமை நானோ தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வாய்ப்புகள் என்ற தலைப்பில் புதுவைப் பல்கலைக்கழக பேராசிரியர் முகமது ஜாபர் அலி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆன்டனி ஜோசப் வேளாங்கண்ணி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பேராசிரியர் கண்ணன் ஆகியோர் உரையாற்றினர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் அமர்வில் பரிசோதித்து சிகிச்சையளிக்கும் மருத்துவத்தின் மருந்துகளுக்கான பல செயல்திறன் கொண்ட நானோ பொருள் வடிவமைப்பு என்ற தலைப்பில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகேசன், கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர் விவேக், சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் யாமினி சுதாலட்சுமி ஆகியோர் உரையாற்றினர். இதையடுத்து சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் இராமமூர்த்தி நிறைவுரையாற்றினார். இந்த கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். சிறந்த கட்டுரைகளை சமர்ப்பித்த மாணவர்களுக்கு பேராசிரியர் வேணுகோபால் முருகப்பிள்ளை பரிசுகளை வழங்கினார். நவீன உயிரியல் மருத்துவ சிகிச்சையின் அணுகுமுறைகளை மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாக இக்கருத்தரங்கம் நடைபெற்றதாக கல்லூரியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: