பெரியார் நகரில் மறுகட்டுமானம் செய்யப்பட உள்ள 440 குடியிருப்புதாரருக்கு ரூ.1.05 கோடி காசோலை: அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு வழங்கினர்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பெரியார் நகர்  திட்டப்பகுதியில் மறுகட்டுமானம் செய்யப்பட உள்ள குடியிருப்புகளில்  வசிக்கும் 440 குடியிருப்புதாரருக்கு கருணை தொகையாக   ரூ.1.05  கோடி  காசோலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் குடியிருப்புதாரர்களுக்கு காசோலைகளை வழங்கினர்.விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் கட்டிடம் தனியாருக்கு நிகராக இருக்கும். கட்டுமான பணிகளை ஆய்வு செய்ய தனியார் தொழில்நுட்ப வல்லூநர் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக்குழு 3 மாதத்திற்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்கும். குடியிருப்புதாரர் அனைவரும் விரைவில் குடியிருப்புகளை காலி செய்யும் பட்சத்தில் புதிய குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். குடியிருப்பு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியிருப்போர் நலச் சங்கங்களால் பராமரிப்பு பணிக்காக  வசூலிக்கப்படும் தொகைக்கு இணையாக அரசால் நிதி வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  462 குடியிருப்பு நலச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

நிகழ்ச்சியில் சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்எல்ஏ தாயகம் கவி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் ம.கோவிந்த ராவ், திரு.வி.க நகர் மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், கவுன்சிலர்கள் அம்பேத்வளவன் (எ) குமாரசாமி, வாரிய தலைமை பொறியாளர் வே.சண்முக சுந்தரம்,  மேற்பார்வை பொறியாளர் எஸ்.சந்திர மோகன், நிர்வாகப் பொறியாளர் எஸ்..சுடலைமுத்து குமார், தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் ஜே.அ.நிர்மல் ராஜ் மற்றும் வாரிய பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: