தமிழக அரசு அமைக்க உள்ள வானிலை மையத்துடன் இந்திய வானிலை மையமும் இணைந்து பணியாற்றும்: இந்திய வானிலை மையத்தின் தலைவர் மொஹபத்ரா பேட்டி

சென்னை: தமிழ்நாடு அரசு அமைக்கவுள்ள வானிலை மையத்துடன் இந்திய வானிலை மையமும் இணைந்து பணியாற்றும் என இந்திய வானிலை மைய தலைவர் மொஹபத்ரா தெரிவித்துள்ளார். சென்னை துறைமுக பொறுப்பு கழகத்தில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பழைய எஸ் பாண்ட் வகை ரேடார் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இதை இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மொஹபத்ரா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகருமான திருப்புகழ் ஆகியோர் நேற்று செயல்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், இஸ்ரோ துணை இயக்குநர் ஆனந்தன் மற்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கலந்துகொண்டனர். பேரிடர் மேலாண்மை ஆணைய ஆலோசகர் திருப்புகழ் பேசுகையில், ‘‘துல்லியமாக வானிலை அறிவிப்புகள் வழங்குவதற்கு முக்கியமான காரணம் ரேடர்கள். இந்திய வானிலை மையம் மற்றும் இஸ்ரோ இணைந்து சென்னையில் உள்ள ரேடர்களை சரி செய்துள்ளது.இந்திய வானிலை மையத்தின் அறிவிப்புகள் கரணமாக வெப்ப அலைகளால் ஏற்படும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது”என்றார்.

இதை தொடர்ந்து இந்திய வானிலை மைய தலைவர் மொஹபத்ரா பேட்டியளிக்கையில் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு இந்திய வானிலை மையம் முக்கியத்துவம் அளித்து வருகிறது. வானிலை விவரங்களை கண்காணிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு 2 ரேடர்கள், ஸ்ரீஹரிக்கோட்டாவில் 1, காரைக்காலில் 1 என 4 ரேடார்கள் உள்ளது. மாநிலம், மாவட்ட வாரியாக வானிலை முன்னறிவிப்புகள் கொடுக்கப்படுகிறது. மாநில அரசுடன் இணைந்து வானிலை ஆய்வுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயல், வெப்ப அலை, குளிர் காற்று, கடலின் வெப்பம் போன்றவை பொறுத்து வானிலை மாற்றம் ஏற்படுகிறது. குறுகிய பகுதிக்குள் கணிப்பதும், 2 மணி நேரத்திற்குள் ஏற்படும் மாற்றம், மேக வெடிப்பு போன்றவற்றை கணிப்பதில் சிரமம் உள்ளது. 5 வருடத்திற்கு முன்பு 60 சதவீதம் என இருந்த துல்லிய தன்மை, 2022ல் 79 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ரேடார்கள் போதுமான அளவில் உள்ளது, கல்பாக்கத்தில் புதிதாக ரேடார் அமைப்பதற்கான பணிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு அரசு அமைக்கவுள்ள வானிலை மையத்துடன் இந்திய வானிலை மையம் இணைந்து பணியாற்றும். இந்திய அரசின் நிறுவனம் என்பதால் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றுகிறார்கள். அதனால் தமிழ் மொழி தெரிந்தவர்களை மட்டுமே பணியமர்த்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார். தமிழகத்தில் ரேடார்கள் போதுமான அளவில் உள்ளது, கல்பாக்கத்தில் புதிதாக ரேடார் அமைப்பதற்கான பணிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

Related Stories: