வத்திராயிருப்பு பகுதியில் பருவமழை தொடங்கும் முன் மதகுகளை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் கண்மாய், குளங்களில் சேதமடைந்த மதகுகளை பருவமழை தொடங்கும் முன் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் என்னும் இடத்தில் பெரியாறு, கோவிலாறு அணைகள் உள்ளன. இந்த அணைகளிலிருந்து வரும் தண்ணீரை பூரிப்பாறைக்குளம், சீவனேரி, குணவந்தனேரி, கொடிக்குளம், வத்திராயிருப்பு பெரியகுளம், விராகசமுத்திரம், வில்வராயன்குளம் உள்ளிட்ட 40 கண்மாய்களில் தேக்கி பாசனத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

இவைகள் மூலம் 7,218.83 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அணைகளிலிருந்து நேரடியாக 1,312.34 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் குடிமராமத்து பணி என சில கண்மாய்களில் பணிகள் நடைபெற்றன. ஆனால், அவைகள் முறையாக நடைபெறவில்லை. குடிமராமத்து மூலம் ஒவ்வொரு கண்மாய்களில் நடந்த பணிகள் என்ன? இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? பணிகள் முழுமையாக நடைபெற்றதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பருவமழை தொடங்கும் முன் கண்மாய்களில் மதகுகள் சரியாக இயங்குகிறதா என்பதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். மதகுகளை ஏற்றி, இறக்க ஆயில், கிரீஸ் போட வேண்டும். கலிங்குகள் சேதமின்றி உள்ளனவா என்று பார்க்க வேண்டும். கலிங்குகள் சேதமிருந்தால், அவைகளை சீரமைக்க வேண்டும். கண்மாய் கரைகள் பலமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பலமில்லாத கரைகளை பலப்படுத்த வேண்டும்.

அதோடு வரத்துக் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். புதர்மண்டிக் கிடக்கும் வரத்துக் கால்வாய்களை தூர்வார வேண்டும். சில கண்மாய்களில் மதகுகள் சேதடைந்துள்ளதால், தேக்கப்படும் மழைநீர் வீணாகிறது. வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் வெளியேறும் மதகு பகுதியில் உள்ள தளம் கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும். மழை காலம் தொடங்கும் முன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாய் மதகுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: