இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது! காமன்வெல்த் மாநாட்டில் டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு பெருமிதம்

கனடா: கனடா நாட்டின் ஹாலிஃபாக்ஸ் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் நாடாளுமன்றங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்ற தலைப்பில் மாநிலங்களவை  உறுப்பினர் டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசியதாவது:

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது பெண்களின் பிரதிநிதித்துவம் 15 சதவீதமாக இருக்கிறது. இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக இரண்டாவது முறையாக ஒரு பெண், அதுவும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த பெண் தேர்வு செய்யப்பட்டிருப்பதில் இந்தியா பெரு மகிழ்ச்சிகொள்கிறது.

2014 ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற  விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, சேர்மன் (Chairman) என்கிற ஆண் விகுதி கொண்ட வார்த்தை, பாலின சமத்துவத்தை நிலைநாட்டும் வகையில் சேர்பெர்சன் (Chairperson) என மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பாலின சமத்துவம் பேணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டது.

2001 முதல் இந்தியாவில் பாலின வேறுபாடுகளைக் களையவும்; பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும், நிதி நிலை அறிக்கையில் பெண்கள் மேம்பாடுக்கான தனியாக நிதி ஒதுக்கப்பட்டு, ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்ம்பாட்டு அமைச்சகம் மூலம் பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இந்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், ஐ.நா.வின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மகளிருக்கான திட்டங்களைத் தீட்டி அமல்படுத்துகிறது.

மகளிருக்கு சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றங்களில் 33சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா 2010ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு காரணங்களால் மக்களவையில் அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்ற வருத்தம் இருப்பினும் விரைவில் அம்மசோதா சட்டமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.

காமன்வெல்த் கூட்டமைப்பின் விதிகளில் தற்போது மேற்கொள்ளவிருக்கும் திருத்தங்களை நான் ஆதரிக்கிறேன். இதன்மூலம் இந்தக் கூட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு இன்னும் அதிகமாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இவ்வாறு கனிமொழி என்.வி.என். சோமு பேசினார்.

Related Stories: