மாமல்லபுரம் அருகே வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி; வருவாய்த்துறை ஊழியர்கள் தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை வருவாய் துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களிடமிருந்து, அவர்களின் விருப்பத்தின்பேரில் ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலில் இணைக்க அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் தினமும் வீடு, வீடாக சென்று ஆதார் எண் விவரங்களை வாக்காளர்களிடம் பெற்று இணைக்கும் பணியை செய்து வருகின்றனர்.

அதன்படி, மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தில், வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வீடு, வீடாக சென்று ஆதார் எண் இணைக்கும் பணியினை தீவிரமாக நடத்தினர். இதில், ஏராளமானோர் ஆர்வத்துடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொண்டனர். எனினும், சிலர் தயக்கம் காட்டுகின்றனர். இது குறித்து, வருவாய்த்துறை ஊழியர்கள் கூறுகையில்,‘இனி வரும் நாட்களில் வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்’என கூறினர்.

Related Stories: