மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே பொதுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே பொதுத்துறை நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த படாளம் அருகே அரசு பொதுத்துறை நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட  பணியாளர்கள் சுமார் இருபது ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வாரத்தில் ஒரு நாளைக்கு சம்பளத்தோடு கூடிய விடுப்பு வேண்டும், சம்பள உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நீண்ட நாட்களாக நிர்வாகத்திடம் தெரிவித்து வருந்தனர்.

இருப்பினும், இது வரை நடவடிக்கை இல்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தும் விதமாக நேற்று, அந்த கம்பெனி வாயில் அருகே சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நிறுவனம் சார்ந்த தொழிற்சங்க தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். செங்கல்பட்டு மாவட்ட சிஐடியு தலைவர் பகத்சிங்தாஸ் முன்னிலையில் வகித்தார். துணை தலைவர் மாசிலாமணி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். இதில் தொழிற்சாலையில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர். இதைதொடர்ந்து அமைதி பேச்சு வார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: