மாதவரம் பகுதியில் ஆபத்தான நிலையில் மின் கம்பம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவொற்றியூர்: மாதவரம் மண்டலம் 26வது வார்டுக்குட்பட்ட அசிசி நகர் பிரதான சாலையில் மினி பேருந்து, குடிநீர் லாரி, கார், கல்லூரி வாகனம், மோட்டார் பைக் என தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், கடந்த மாதம் இந்த அசிசி நகர் சாலையோரம் மழைநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட்டிலான கால்வாய் அமைக்கப்பட்டன. இந்த கால்வாய்க்காக பள்ளம் தோண்டும் இடத்தில் சாலையோரம் தெருவிளக்கு மின் கம்பம் இருந்ததால் அந்த மின்கம்பம் கால்வாய் பணி முடியும் வரை கீழே விழாமல் கட்டைகளால் தாங்கி பிடித்து மின்கம்பம் கட்டப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த மின்கம்பம் இருக்கும் இடத்தில் மண்ணை நிரப்பி சீர் செய்யாமல் அப்படியே விட்டு விட்டுள்ளனர்.

இதனால் இந்த மின்கம்பம் பிடிமானம் இல்லாமல் ஆபத்தான நிலையில் எந்த நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால் இந்த மின்கம்பம் கீழே விழுந்து விடுமோ என்று இப்பகுதியில் சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் இரவு நேரங்களில் விளக்கு எரிவதால் மின் தாக்குதல் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து மாதவரம் மண்டல தெருவிளக்கு பிரிவு அதிகாரிகளுக்கு இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மின்கம்பம் கீழே விழுந்து விபத்து ஏற்படுவதை தடுக்க உடனடியாக போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: