ரூ.800 கோடி மூலம் டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி: டெல்லி முதல்வர் அரவிந்த் பேட்டி

டெல்லி; ரூ.800 கோடி மூலம் டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். முதல்வர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் ஆட்சி செய்து வருகிறது. கெஜ்ரிவால் அரசில்  துணை முதல்வராக பதவி வகித்து வரும் மணீஷ் சிசோடியா, 2021-22ம் ஆண்டுக்கான  மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள்  நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

இதன்மீது  நடவடிக்கை எடுக்கும் ஒரு பகுதியாக மணீஷ் சிசோடியாவின் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 19ம் தேதி சிபிஐ அமைப்பு அதிரடி சோதனையிலும் ஈடுபட்டது. இதற்கிடையே, ஆம் ஆத்மி எம்.எல்ஏக்கள் பாஜவில் இணைந்தால் ரூ.20 கோடி  கொடுப்பதாக பாஜவில் இருந்து பேரம் பேசப்பட்டதாகவும், இணையாவிட்டால் பொய்  வழக்கு தொடரப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஆம் ஆத்மி  தரப்பில் நேற்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லி காந்தி நினைவிடத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அஞ்சலி செலுத்தினார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீடு, அலுவலகத்தில் நடந்த சிபிஐ சோதனையில் எதுவும் சிக்கவில்லை.

ஆம் ஆத்மியின் 40 எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.20 கோடி என ரூ.800 கோடி தந்து டெல்லி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. ரூ.800 கோடி யாருடைய பணம்? அதை அவர்கள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதை நாடு நிச்சயம் அறிய வேண்டும். எங்களது எந்த எம்எல்ஏவும் விலை போகவில்லை. ஆம் ஆத்மி அரசு ஸ்திரத்தன்மையுடன் இருக்கிறது. நேர்மையான கட்சிக்கு நீங்கள் வாக்களித்துள்ளீர்கள் என்பதை டெல்லி மக்களிடம் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் செத்தாலும் நாட்டு மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்ய மாட்டோம் இவ்வாறு கூறினார்.

Related Stories: