எச்சூர் ஆதிதிராவிடர் பகுதியில் 48 மணி நேரம் மின் வெட்டு

மாமல்லபுரம்: எச்சூர் ஆதிதிராவிடர் பகுதியில் 48 மணி நேரம் மின் துண்டிப்பால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மாமல்லபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கடந்த 3 நாட்களாக இரவு நேரங்களில் அடிக்கடி சூறைக்காற்று, இடியுடன் கூடிய பலத்த மழை பெய்கிறது. இதனால், இரவில் கடும் குளிர் நிலவுகிறது. பலத்த மழையால், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மின் வினியோகம் படிப்படியாக சீராக தொடங்கி உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம், நெம்மேலி, வட நெம்மேலி, திருவிடந்தை, பையனூர் மணமை, கடம்பாடி, வடகடம்பாடி, காரணை, குழிப்பாந்தண்டலம், எச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர், மின் வினியோகம் சீரானது. இதில், எச்சூர் ஆதிதிராவிடர் பகுதியில் 48 மணி நேரமாகியும் மின் வினியோகம் சீராகாமல் கிராமமே இருளில் மூழ்கி உள்ளது.

இதனால், அப்பகுதி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடும் சிரமத்திற்காளாகி வருகின்றனர். மேலும், இரவு நேரத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியாமலும்,  பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாடங்களை படிக்க முடியாமலும் தவித்து வருகின்றனர். மேலும், மின் துண்டிப்பு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மானாம்பதி மின் வாரிய அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாதா? மின்சாரம் வரும் ஆனால் எப்போது வருமென்று தெரியாது என ஒருமையில் பேசுவதாக, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மின் வாரிய உயரதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தங்கு தடையின்றி எச்சூர் அதிதிராவிடர் பகுதியில் மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: