அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் 8வது முக்கிய குற்றவாளி சிக்கினார்; கார் கொடுத்து உதவியது அம்பலம்

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் நடந்த கொள்ளையில் 8வது முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளையடித்த பணத்தை கொண்டு செல்வதற்கு கார் கொடுத்து உதவியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு; சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் உள்ள பெடரல் தனியார் வங்கியில் ஏராளமானவர்கள் தங்களது நகைகளை அடமானம் வைத்துள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 13ம்தேதி வங்கியில் 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். கூடுதல் போலீஸ் கமிஷனர் அன்பு, துணை ஆணையர் விஜயகுமார், உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் 11 தனிப்படை அமைத்து அதே வங்கியில் பணிபுரிந்த மண்டல மேலாளர் முருகன்(29), இவரது கூட்டாளிகள் சந்தோஷ்(30), பாலாஜி(28), செந்திகுமரன்(38), வத்சன், சூரியபிரகாஷ்(29) மற்றும் சென்னை அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு ஆய்வாளர் அமல்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். இந்த கொள்ளையில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளைபோன 31.7 கிலோ தங்க நகைகளை  மீட்டு வங்கியில்  ஒப்படைத்தனர். இதில் சம்பந்தப்பட்ட சிலரை தேடி வருகின்றனர். இந்த நிலையில், இந்த கொள்ளையில் சென்னை வில்லிவாக்கம் பாரதிநகர் பகுதியை சேர்ந்த கேப்ரியல்(29) நேற்று கைது செய்தனர். இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சந்தோஷின் நெருங்கிய கூட்டாளி என்றும் கொள்ளையடித்த பணத்தை கொண்டுசெல்வதற்கு கார் கொடுத்து உதவியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது உள்ளது.

Related Stories: