தேங்காப்பட்டணம் அருகே கடல்சீற்றத்தால் அழிந்த அரையந்தோப்பு கிராமம்-20 ஆண்டுகளாக தொடரும் அவலம்

புதுக்கடை : தேங்காப்பட்டணம் அரையந்தோப்பு பகுதியில் கடலரிப்பு  தடுப்பு  சுவர்  இல்லாத காரணத்தால் அந்த  பகுதி கடந்த 20 வருடமாக சீரழிந்த  நிலையில்  காணப்படுகிறது. வருடம் தோறும் ஏற்படும் கடலரிப்பால் ஒரு கடற்கரை கிராமமே அழிந்தது. தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம்  அமைந்துள்ள பகுதியில்   இருந்து ஹெலன் நகர் வரை இனயம் மண்டலத்துக்குட்பட்ட 8 மீனவர் கிராமங்கள் அமைந்துள்ளன.

இந்த  மீனவ கிராமங்களை இணைக்க தேங்காப்பட்டணம் பள்ளிமுக்கு என்ற இடத்தில் இருந்து  குறும்பனை வரை கடற்கரை சாலை   அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை  துவங்குகின்ற  இடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள  பகுதிதான் அரையன் தோப்பு  பகுதி. இந்த  கிராமத்தில் பல  ஆண்டுகளாக  இந்து அரையர் பிரிவை சேர்ந்த சுமார் 25 மீனவ குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

 கடந்த காலங்களில் குமரி  மாவட்டத்தின்  பல கடற்கரை பகுதிகளில் அலை தடுப்பு சுவர்கள்  அமைக்க  துவங்கிய  போது, தேங்காப்பட்டணம்  பகுதியில் வருடத்தில்  இரண்டு முறை ஏற்படும் கடலரிப்பில் பல கிராமங்கள்  சேதமடைந்தன. அப்போது  பாதிக்கப்பட்ட கிராமங்களில் கடலரிப்பு தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அரையன் தோப்பு பகுதியில்  தடுப்பு  சுவர்கள் அமைத்தால் அடுத்த சில மாதங்களில் அப்பகுதி  கடல்  சீற்றத்தில்  சிக்கி, தடுப்பு  சுவர்கள் கடலில் அடித்து செல்லப்படுவதுடன், அந்த  கிராமத்தில்  உள்ள  வீடுகளையும்  அலை  கடலில்  அடித்து  செல்வது  வழக்கமாக  நடந்து  வந்தது.

 பின்னர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு  மறுபடியும் தடுப்பு சுவர்  அமைத்தாலும்,  அமைத்த 6 மாதகாலத்தில் மீண்டும் மீண்டும் கடலில் அடித்து  செல்லப்படுவது  வழக்கம். இந்த வகையில் அரையன்  தோப்பில் ஒன்றுக்கு  மேற்பட்ட முறை  அரசு  நிதி ஒதுக்கி தடுப்பு சுவர்  அமைத்தது. ஆனால்  கடல் சீற்றத்தால் தடுப்பு சுவர்  மட்டுமின்றி, சுமார் 15 ஆண்டுகளுக்கு  முன்பு  அந்த கிராமத்தையே கடல் அடித்து  சென்றது. இதனால்  அங்கு  வசித்து  வந்த  அனைத்து  குடும்பத்தினரும் வேறு பகுதிகளுக்கு இடம்  பெயர்ந்தனர்.

மேலும் கடல் சீற்றத்தால் அந்த பகுதி கடலோர சாலை உடைக்கபட்டு, சாலை முழுவதும் மணல் மேடாக மாறுவதும்,  போக்கு வரத்து தடை  படுவதும் தொடர்கதை. இதனால் கடந்த  20  வருடங்களாக   மீன்பிடி துறைமுகம் செல்லும் மீனவர்கள் பல கிலோ மீட்டர் சுற்றி மீன்பிடிக்க செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை ஒட்டியுள்ள பல மீனவ கிராம மக்களும் சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது அரையந்தோப்பில்  சுமார் 750 மீட்டர் தூரம்  பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் குப்பைகளை கொட்டி, அந்த  பகுதியில்  தூர் நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படுகிறது.

 எனவே  இந்த பகுதியில் நிரந்தர கடலரிப்பு  தடுப்பு  சுவர் அமைத்து, சாலையை சீரமைக்க  வேண்டும்  என கடந்த 20 ஆண்டுகளாக  அப்பகுதியினர்  கோரிக்கை  விடுத்தது வருகின்றனர். அரசும்  பலமுறை சாலை  சீரமைத்தாலும் சில தினங்களில் கடல்  அடித்து  செல்வதால்  பின்னர் கண்டு  கொள்ளாத நிலை ஏற்பட்டு, ஒரு கட்டத்தில் அப்பகுதி  பொது மக்கள்  தங்கள் சொந்த  செலவில் பல முறை  போக்கு வரத்து  வசதிக்காக சாலை சீரமைத்த நடவடிக்கைகளும் உண்டு.   

குறிப்பாக  3 முறை  காங்கிரஸ்  கட்சி  சார்பிலும், பல முறை  முள்ளூர் துறை  ஊர் மக்கள் சார்பிலும் சாலை சீரமைக்கப்பட்டதுண்டு. எனவே அரையன்தோப்பில்  நிரந்தரமாக நவீன தொழில்நுட்ப உதவியுடன் தடுப்பு சுவர் அமைக்க  வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த  நிலையில் கடந்த சில  மாதங்கள்  முன்பு அரையன் தோப்பு  சாலையை புதியதாக சீரமைக்க 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.  

இதற்கான  பணி  துவங்கியபோது, கடலரிப்பு  தடுப்பு சுவர் இல்லாமல் சாலை மட்டும்  சீரமைத்தால் கடலரிப்பால்  சாலை  மீண்டும் சேதமாகும்  என்பதால், முதலில்  தடுப்பு சுவர் அமைத்த பின்னர்தான் சாலை சீரமைக்க  வேண்டும்  என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலை அமைக்கும்  பணி நிறுத்தப்பட்டது.

அதனையடுத்து   சம்பந்தப்பட்ட  துறையினரை  சந்தித்து, கிராம சாலைகள்  மற்றும் நபார்டு வங்கி  திட்டத்தின் கீழ் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்க 9 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. அந்த  தொகையில் பணிமுடியாது  என்பதால் தற்போது அரசு இரண்டரை கோடி  மதிப்பில் அவசர தடுப்பு  சுவர்  அமைக்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் அறிவிப்பு  வெளியானது.

ஆனால்  பல  மாதங்களாக அறிவிப்பு நிலையில் மட்டும் உள்ளதால் அப்பகுதியினர் உடனடியாக அரயந்தோப்பு பகுதியில் கடலரிப்பு  தடுப்பு சுவர் அமைத்து, சாலை  சீரமைக்க வேண்டும் என  கோரிக்கை விடுத்துள்ளனர்.  எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடி  தடுப்பு சுவர் பணிகள்   துவங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடற்கரையில் குவியும் கழிவுகள்

அரையன் தோப்பு கிராமம் இருந்த பகுதி தற்போது கழிவுகளை கொட்டி குவிக்கும் பகுதியாக மாறியுள்ளது. சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல தரப்பட்ட கழிவுகளை அங்கு வாகனங்களில் கொண்டு சென்று கொட்டுவதாக புகார் உள்ளது . இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்படுகிறது. சுமார் 500 மீட்டர் தூரத்தில் கழிவு பொருட்களால் நிறைந்து காணப்படுகிறது.

பணிகள் தொடங்குவது எப்போது?

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, சாலை பணி மற்றும் கடலரிப்பு தடுப்பு சுவர் பணிகள் அனைத்தும் தற்போது கட்டுமான பராமரிப்பு துறை வசம் ஓப்படைக்கப்பட்டுள்ளது. அரையன் தோப்பில் இனி தடுப்பு சுவர் சேதமடையாத வகையில் நவீன தொழில் நுட்ப வசதியுடன் சீரமைக்கப்படும் என்று கூறினார்கள்.

Related Stories: