வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது; ரூ.10 லட்சம், கத்தி, பைக் பறிமுதல்

சென்னை: வடபழனி நிதி நிறுவனத்தில் கத்தி முனையில் ரூ.30 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. வடபழனி மன்னார் முதலி 1வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (44). இவர் தனது நண்பர்கள் 9 பேருடன் சேர்ந்து கடந்த 8 மாதங்களாக ‘ஓசானிக் கேபிடல்’என்ற பெயரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் கடந்த 17ம் தேதி முகமூடி அணிந்த வந்த 7 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அங்கு பணியில் இருந்த தீபக் மற்றும் நவீன்குமாரை கத்தி முனையில் மிரட்டி ரூ.30 லட்சம் பணத்தை அள்ளி சென்றது. இந்த வழக்கில் பிடிபட்ட கல்லூரி மாணவன் ரியாஷ் பாஷா (22) அளித்த தகவலில் முக்கிய குற்றவாளியான கோயம்பேடு பகுதியில் வேலை செய்து வரும் முக்கிய குற்றவாளி மொட்டை (எ) கண்ணன் (28), இஸ்மாயில் (21), ஜானி (22), பரத் (23), கிஷோர் (23), தமிழ் செல்வன் (21) ஆகியோரை இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த கிஷோர் மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் கடந்த 18ம் தேதி திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். பிறகு தனிப்படையினர் தேடுதல் வேட்டையில் ராணிபேட்டையில் பதுங்கி இருந்த ஜானி (எ) சந்தோஷ், தினேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் கடந்த 19ம் தேதி கைது செய்தனர். அதேபோல், முக்கிய குற்றவளியான மொட்டை (எ) கண்ணனை மற்றொரு தனிப்படை போலீசார் மாங்காடு பகுதியில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த இஸ்மாயின் மற்றும் பரத் ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை செல்போன் சிக்னல் உதவியுடன் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 லட்சம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய கத்தி, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரை இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.17 லட்சம் பணம் பறிமுதல் ெசய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம் குறித்து கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: