புழல் வடகரை பகுதியில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும்; மாணவர்கள் கோரிக்கை

புழல்: புழல் அடுத்த வடகரை பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், அரசு தொழிற்பயிற்சி நிலையம், மகளிர் விடுதி ஆகியவை 15 ஏக்கர் பரப்பளவில் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றன. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பள்ளி ஆக தொடங்கப்பட்டு படிப்படியாக மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட இந்த பள்ளியில் புழல், மாதவரம், செங்குன்றம், பாடியநல்லூர், பம்மதுகுளம், பொத்தூர், கும்மனூர், அலமாதி, வடபெரும்பாக்கம், கொசப்பூர், விச்சூர், நல்லூர், விஜயநல்லூர், ஆங்காடு, அருமந்தை, பெருங்காவூர், விளாங்காடுபாக்கம், வடகரை, புள்ளிலைன், தீர்த்தங்கரையம்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படித்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு உயரதிகாரிகள் என பலதரப்பட்ட நிலைகளில் உள்ளனர். இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலைப் பள்ளிகள் உருவாக்கப்பட்ட நிலையில் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் உள்ளூரிலே படித்து வருகின்றனர்.

மேல்படிப்புக்காக அரசு கல்லூரிகளுக்கு படிக்க செல்ல வேண்டுமென்றால் 15 கிலோ மீட்டர்  தூரமுள்ள சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரிக்கும், 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள பொன்னேரி அரசு கலைக் கல்லூரிக்கும், மருத்துவம் சார்ந்த செவிலியர் படிப்புக்கு செல்ல வேண்டும் என்றால் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் பல்வேறு கிராமங்களில் உள்ள பிளஸ் 2 படித்து முடித்த மாணவ, மாணவிகள் வெளியில் சென்று படிக்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இடவசதி உள்ள வடகரை பகுதியில் அரசு கலைக் கல்லூரியும், செவிலியர் பயிற்சி மையத்தையும் தொடங்கினால் மேற்கண்ட  சுற்றுவட்டாரத்தில் உள்ள பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் படிக்க ஏதுவாக இருக்கும். எனவே, மாணவர்கள் நலன் கருதி இந்த பகுதியில் அரசு கல்லூரி கொண்டு வர வேண்டும் என இப்பகுதி மக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: