உடுமலை அருகே செந்நாய் கடித்து ஆடுகள் பலி-பொதுமக்கள் அதிர்ச்சி

உடுமலை : உடுமலை அருகே செந்நாய் கடித்து ஆடுகள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உடுமலை அருகே உள்ள சின்னவீரம்பட்டி ஊராட்சி இந்திரா நகரில் விவசாயிகள் ஆடு வளர்ப்பு தொழிலை பிரதானமாக செய்து வருகின்றனர். தோட்டங்களில் பட்டிகளை அமைத்து நூற்றுக்கணக்கான ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் செந்நாய் கூட்டம் ஆடுகளை கடித்து கொன்று விடும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.

கடந்த மாதம் செந்நாய் கூட்டம் ஒன்று, பட்டியில் புகுந்து 81 ஆடுகளை கடித்து குதறி அட்டகாசம் செய்தது. இந்நிலையில், விவசாயி தங்கவேலு என்பவரின் பட்டிக்குள் நேற்று புகுந்து 3 ஆடுகளை செந்நாய்கள் கடித்து கொன்று விட்டு மீண்டும் வனத்திற்குள் சென்றது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள், விவசாயிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் தடுப்பு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து விவசாயி கூறுகையில்,``கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ஆடுகளை செந்நாய்கள் கடித்து கொன்றுவிட்டன. ஒரு கன்றுக்குட்டியையும் கொன்றுள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் இருந்து செந்நாய் கூட்டம், கிராமத்திற்குள் வராமல் தடுக்க நிரந்தரமாக பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: