வங்கி கொள்ளையில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சிறையில் அடைப்பு: மாஜிஸ்திரேட் உத்தரவு

சென்னை: அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் அமல்ராஜை வரும் செப்டம்பர் 2ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார். சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள நகைக் கடன் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்திருந்த ரூ.15 கோடி மதிப்பிலான 31.7 கிலோ தங்க நகைகளை கடந்த 13ம் தேதி, அதே வங்கியில் பணிபுரியும் முருகன், நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்து சென்றுவிட்டார். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முருகன், நண்பர்கள் சந்தோஷ், பாலாஜி, சூர்யா, செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் ஒரு பகுதியை சந்தோஷ், தனது உறவினரான அச்சிறுப்பாக்கம் காவல் ஆய்வாளர் அமல்ராஜ் (57) வீட்டில் வைத்துவிட்டு வந்திருப்பது விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து திருட்டு நகைகளை வீட்டில் வைத்திருந்த குற்றத்துக்காக அமல்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அமல்ராஜிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து, சென்னை எழும்பூர் மாஜிஸ்திரேட் ரேவதி வீட்டில் நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது செப்டம்பர் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அமல்ராஜை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். உத்தரவின் பேரில் அமல்ராஜ் இரவோடு, இரவாக சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை உருக்குவதற்கு கொள்ளை கும்பலுக்கு உதவிய கோவையை சேர்ந்த ஸ்ரீவத்சவா (33) கைது செய்யப்பட்டு, நேற்று சென்னை அழைத்து வரப்பட்டார். இவர், வைத்திருந்த நகை உருக்கும் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து, எந்த கடையில் வாங்கப்பட்டது என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: