52 ஆண்டுகளுக்கு முன்பாக திருடுபோன திருஞான சம்பந்தர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

சென்னை: கும்பகோணத்திலிருந்து  52 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட திருஞான சம்பந்தர் சிலை  அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் தாண்டந்தோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில், 1971ம் ஆண்டு பார்வதி, திருஞான சம்பந்தர், கிருஷ்ண கலிங்க நர்த்தனம் , அகஸ்தியர் , அய்யனார் ஆகிய 5 உலோக கோயிலின் பூட்டை உடைத்து திருடுபோனதாக 2019 ம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் கே.வாசு புகார் அளித்தார்.

இந்நிலையில் போலீசாரின் தீவிர விசாரணையில், அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல மையத்தின் வலைதளத்தில் நடனபுரீஸ்வரர் சிவன் கோயிலில் திருடுபோன திருஞதன சம்பந்தர் சிலையின் புகைப்படம் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் தங்களிடம் உள்ள கோப்பில் உள்ள படத்தில் உள்ள சிலையுடன் ஒப்பிட்டனர். அப்போது, அந்த சிலை கும்பகோணத்தில் இருந்து திருடுபோனது என்பது தெரியவந்தது.

மேலும், தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட பல சிலைகள் அமெரிக்க ஏலகூடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, இதனை மாநில தொல்லியல் துறையின் நிபுணர்களும் உறுதி செய்த நிலையில், சிலை வைக்கப்பட்டுள்ள கிறிஸ்டீஸ் ஏல மையத்திற்கு தகவல் தெரிவித்தும், இந்திய அமெரிக்க அரசுகளுக்கு இடையேயுள்ள குற்ற விஷயங்களில் பரஸ்பர உதவி புரிதல் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிலையை மீட்டுக்கொடுக்கும்படியும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அமெரிக்க அரசுக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஏற்கனவே இதே கோவிலில் திருடப்பட்ட 12 ம் நூற்றாண்டை சேர்ந்த பார்வதி சிலையும் அமெரிக்காவில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல மையத்தில் இருப்பதை கண்டுபிடித்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் அதை இந்தியாவிற்கு மீட்டுக்கொண்டு வர நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பந்தர் சிலையையும் ஆவணங்களை அடிப்படையாக வைத்து அமெரிக்காவில் உள்ள ஏல மையத்தில் இருந்து மீட்கும் முயற்சியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட பார்வதி சிலையுடன் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்மந்தர் சிலையும் கூடிய விரைவில் தாண்டந்தோட்டத்தில் உள்ள நடனபுரீஸ்வரன் சிவன் கோயிலில் வைக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: