மயிலாடுதுறையில் நள்ளிரவில் வன்னியர் சங்க நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை: 10 பேரை பிடித்து விசாரணை

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் வன்னியர் சங்க நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மயிலாடுதுறை கொத்த தெருவை சேர்ந்தவர் கண்ணன் (31). வன்னியர் சங்க நகர செயலாளரான இவருக்கும், கலைஞர் காலனியை சேர்ந்த மின்வாரிய தொழிலாளி கதிரவனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓட்டலில் சாப்பிட்ட போது தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் இருந்த அவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுதலையானார். அதன்பின்னரும் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு கண்ணன் பீடா வாங்குவதற்காக புதிய பஸ் ஸ்டாண்டுக்கு டூ வீலரில் வந்தார். அவருடன் மற்றொரு டூ வீலரில் 2 நண்பர்களும் வந்தனர். கலைஞர் காலனி பகுதிக்கு வந்தபோது, மர்ம கும்பல் ஆயுதங்களுடன் நிற்பதை பார்த்து கண்ணனுடன் வந்த நண்பர்கள் தப்பி விட்டனர். அவரும் தப்பிக்க முயன்றபோது, அந்த கும்பல் சுற்றிவளைத்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பினர். இதில் தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த கண்ணன், ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் 10 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: