தமிழறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழறிஞரும், இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் மறைவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தீவிர செயல்பாடுகளில் இருந்து வயோதிகத்தால் ஒதுங்கியிருந்த நெல்லை கண்ணன் பட்டிமன்ற நடுவர், பேச்சாளர் என்னும் முறையில் தமிழகம் முழுவதும் பயணித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்றார். மேலும், காமராஜரின் மீது தீவிர பற்றுக்கொண்ட இவர், அவரது புகழை மேடைதோறும் பேசிவந்தார். வயோதிகத்தின் காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி காணப்பட்டார்.

இந்த நிலையில் இன்று, நெல்லையில் உள்ள அவரது இல்லத்திலேயே நெல்லை கண்ணன் உயிரிழந்தார். தமிழ் கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன். கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன் அவர்கள், விழா மேடையிலேயே, என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன்.

‘தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021-ம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலக்கிய அறிவில் செறிந்த, பழகுதற்கினிய நெல்லை கண்ணன் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: