தமிழ்நாட்டு மக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும்.: அனைத்து அலுவலர்களுக்கும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு

சென்னை: மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் இன்று (17.08.2022) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சார்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளுடன் காணொளி மூலம் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மா.சிவலிங்கராஜன், இயக்குநர்/பகிர்மானம் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் 16.08.2022 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் மின்னகம் - மின் நுகர்வோர் சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது அறிவித்ததின்படி, தமிழ்நாடெங்கும் உள்ள  234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக அதிகாரிகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நியமித்திருக்கிறது. அதன்படி, ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் ஒரு செயற்பொறியாளரும், அமைச்சர் ஒவ்வொருக்கும் மேற்பார்வை பொறியாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் அந்தந்த பகுதியைச் சார்ந்த நியமனம் செய்யப்பட்ட செயற்பொறியாளரும், தமிழக அமைச்சர்களை அந்த மாவட்டம் சார்ந்த மேற்பார்வை பொறியளாரும் வாரந்தோறும் தொடர்பு கொண்டு மக்களின் குறைகள் மற்றும் தேவைகளை கேட்டறிந்து அதற்கேற்றவாறு செயல்படுமாறு மின்துறை அமைச்சர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி உறுப்பினரையும் மற்றும் அமைச்சர்களையும் வாரிய அதிகாரிகள் நேரடியாக சந்திப்பதன் மூலம் மக்களின் குறைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் மக்களின் தேவை அறிந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் செயல்பட முடியும். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு தங்கு தடையில்லா மின்சாரத்தை தொடர்ந்து வழங்க முடியும்.  

நிறுவப்படும் புதிய மின்மாற்றிகள் மற்றும் புதிய வாரியக் கட்டிடங்கள் ஆகியவற்றை அந்த தொகுதியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினரைக் கொண்டு திறந்து வைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அலுவலர்களையும் மின்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.

மேலும், மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்தில் எடுக்கப்படும் மின்நிறுத்தம் பற்றியும், அதனால் மின்தடை ஏற்படக்கூடிய பகுதிகள் பற்றியும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் மின்துறை அமைச்சர் அனைவரையும் அறிவுறுத்தினார். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாட்டு மக்களுக்கு தரமான தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோக திட்டத்தின் கீழ் தற்போது தமிழ்நாடு மின் கட்டமைப்பில் உள்ள 13.5 சதவீத Line loss-ஐ குறைப்பதற்கு முதற்கட்டமாக இந்த வருடத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

1.    விவசாய மின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ள 1686 பீடர்களில் 475 பீடர்களை விவசாய மின் இணைப்புகள் மட்டும் கொண்ட பீடர்களாக 1523.47 கோடி ரூபாய் செலவில் பிரித்தல்.

2.    273 பீடர்களில் உள்ள உயர் திறன் கொண்ட மின்மாற்றிகளை பிரித்து அதன் முதற்கட்டமாக 99 பீடர்களில் ரூ.534.86 கோடி ரூபாய் செலவில் குறைந்த திறன் கொண்ட மின்மாற்றிகளை அந்தந்த இடங்களில் நிறுவுதல்.

3.    13892 இடங்களில் உள்ள இரட்டை மின்மாற்றிகளில் முதற்கட்டமாக 3207 இடங்களில் உள்ள மின்மாற்றிகளை பிரித்து குறைந்த திறன் கொண்ட மின்மாற்றிகளை ரூ.242.26  கோடி செலவில் நிறுவுதல்.

4.    532.08 கி.மீ. தூரத்திற்கு இருக்கக்கூடிய பழைய மின்கம்பிகளை முதற்கட்டமாக 206.50 கி.மீ. தூரத்திற்கு ரூ.15.41 கோடி ரூபாய் செலவில் புதிய மின்கம்பிகளாக மாற்றுதல்.

மொத்தம் ரூ.2038.79 கோடி ரூபாய் செலவில் இந்தப் பணிகள் வருகின்ற 31.3.2023-க்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றன.  இதேபோன்ற பணிகள் ஒவ்வோரு வருடமும் எடுக்கப்பட்டு வருகின்ற 31.03.2025-க்குள்  அனைத்துப் பணிகளும் முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இப்பணிகள் அனைத்தும் முடிவுற்றவுடன் தமிழ்நாடு மின் கட்டமைப்பில் நிலவி வரும் Line Loss ஆனது 11.92 சதவீதமாக குறையும்.

இதுதவிர, புதிய தொழில்நுட்பத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் கொண்டு வருவதற்காக பல சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றில் ஒன்றாக, ஒவ்வொரு வயர்மேன், லைன்மேன், போர்மேன், ஆகியோர்களுக்கு பயன்படும் வகையில் மின் பகிர்மான கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை புதிய செயலி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் அந்தந்த பகுதியைச் சார்ந்த வயர்மேன், லைன்மேன், போர்மேன் ஆகியோர்களுக்கு மின் இணைப்பு துண்டிப்பு, மறு இணைப்பு, மீட்டர் மாற்றுதல், விகிதப்பட்டி மாற்றுதலுக்கான  செக் ரீடிங் மற்றும் புதிய மின் இணைப்பு கொடுத்தது பற்றிய தகவல் நேரடியாக தலைமையகத்திற்கு கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்.

மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதோடு மின்சாரம் பற்றிய புகார்களையும் தெரிவிக்க வழிவகை செய்யும் வகையில் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.  இதேபோல், நுகர்வோர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் அதற்காக ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தில் பொருந்தும் தொகையானது உடனடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் ஆன்லைன் மூலம் திரும்ப கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன எனவும் மாண்புமிகு மின்துறை அமைச்சர் தெரிவித்தார்.  

எதிர்வரும் மழைக்காலத்தில் மின் கட்டமைப்பில் ஏற்படும் சேதாரங்களை பொறுத்து சம்பந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் தேவைப்படும் பணியாளர்கள் மற்றும் தளவாடப் பொருட்களுடன் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொண்டு தமிழ்நாட்டு மக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் மின்துறை அமைச்சர் உத்தரவிட்டார். மழைக்காலங்களில் பொதுமக்கள் மின்சாதனங்களை எச்சரிக்கையுடன் கையாளுமாறும், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளின் அருகில் செல்ல வேண்டாம் எனவும், அவ்வாறு அறுந்து கிடக்கும் கம்பிகளை கண்டால் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தெரியப்படுத்துமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Related Stories: