மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா நிறைவு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் 3 நாட்கள் நடந்த சர்வதேச காத்தாடி விடும் திருவிழாவில், பல வண்ண வடிவங்களில், ராட்சத காத்தாடிகள் விடப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த திருவிழா நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. உலகளவில், பல்வேறு நாடுகளில் ஆண்டுதோறும் காத்தாடி விடும் திருவிழாவை நடத்தி, பார்வையாளர்களை மகிழ்விப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தில் அதாவது உலக புகழ் வாய்ந்த சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்தது. இதனால், உலகளவில் உள்ள பல்வேறு நாடுகளின் பார்வை தமிழ்நாடு மீது திரும்பியது.

இந்நிலையில், பார்வையாளர்களை மகிழ்விக்க முதல் முறையாக சுற்றுலா துறையும், குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து, மாமல்லபுரத்தில் சர்வதேச காத்தாடி விடும் திருவிழாவை 3 நாட்கள் நடத்தியது. இதில், கடந்த 13ம் தேதி தொடங்கிய காத்தாடி திருவிழா நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதில், அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்று, தேசியக் கொடி, திருவள்ளுவர், விநாயகர், கரடி, புலி, ஆக்டோபஸ், பாம்பு, கதக்களி, சூப்பர்மேன், டிராகன், சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களை பல வண்ண வடிவங்களில் காத்தாடிகளை பறக்க விட்டு பார்வையாளர்களை கவர்ந்து இழுத்து மகிழ்வித்தனர்.

இந்த காத்தாடி திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வருகை தந்து, காத்தாடி பறப்பதை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், காத்தாடி விடும் திருவிழாவை காண வந்த பார்வையாளர்களால், வளாகம் களைகட்டி காணப்பட்டது. மேலும், 3 நாட்கள் நடந்த இந்த காத்தாடி திருவிழாவும் நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.

Related Stories: