சோழிங்கநல்லூரில் போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர், ராஜிவ்காந்தி சாலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, ஹான்ஸ்,  குட்கா போன்ற போதைப்பொருட்களை பதுக்கி வைத்து கடைகளில் விற்பனை செய்து வருவதாக சென்னை அடையாறு காவல் துணைஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின்பேரில், தனிப்படை அமைத்து ராஜிவ்காந்தி சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சோழிங்கநல்லூர் காந்தி தெருவில் உள்ள ஒரு வீட்டில் குட்கா  மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, அப்பகுதியில்,  சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவில் சுற்றித்திரிந்த இருவரை மடக்கி, பிடித்து போலீசார் விசாரித்தனர்.

 அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும் ஆட்டோவுடன் துரைப்பாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், அவர்கள் சென்னை பாலவாக்கம்,அம்பேத்கர் சாலையை சேர்ந்த கண்ணன்(41), பாலவாக்கம் பெரியார் தெருவை  பிரபு(35) என்பதும், சென்னை ராஜிவ்காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் குட்கா முதலான போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. பின்னர், அவர்களை ஆலந்தூர்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: