மின் நுகர்வோர் குறைதீர் மையத்தில் திடீர் ஆய்வு பொதுமக்களின் தேவை, குறைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: பொதுமக்களின் தேவை மற்றும் குறைகளை கேட்டறிந்து உடனடியாக சரி செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்திற்கு சென்று நேற்று ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள  புதிய துணை மின் நிலையங்களையும், மின் மாற்றிகளின் செயல்பாட்டினையும் தொடங்கி வைத்த நிகழ்ச்சியின்போது, மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான மின்னகத்தின் செயல்பாடுகள் குறித்து மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரிடம் கேட்டறிந்தார். அப்போது அமைச்சர், சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டு வருவதாக தெரிவித்தார். பிறகு முதல்வர் நேரடியாக மின்னகத்திற்கு வந்து ஆய்வு செய்வதாக கூறினார்.

இதை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை, அண்ணா சாலை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் மையமான ‘மின்னகம்’ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, முதல்வர் மின்னகத்தில் புகார் அளித்தவர்களில் 10 லட்சமாவது நுகர்வோரான சுவாமிநாதன் என்பவருடன் மின்னகத்தில் இருந்து அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மின்னகத்தினால் வழங்கப்பட்ட குறைதீர்சேவை பற்றி கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களின் அழைப்புகளை ஏற்று, குறைகளை கேட்டறிந்து, அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, மின்னகத்தில் ஆய்வு செய்தபோது, “இந்த மின்னகத்தில் நேற்றைய தேதி வரை 10,50,282 புகார்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. அவற்றுள் 10,41,872 புகார்களுக்கு தீர்வுகள் காணப்பட்டுள்ளன.  மொத்தத்தில் 99% புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.  அமைச்சர்கள் / சட்டமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு பொதுமக்களின் தேவை மற்றும் குறைகளை கேட்டறிந்து உடனடியாக சரி செய்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று மின்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  

இந்த ஆய்வின்போது, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, எரிசக்தித் துறை செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மற்றும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகத்தின் இயக்குனர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: