நடப்பு ஆண்டில் ஐசிஎப் சார்பில் 3,500 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும்; பொது மேலாளர் தகவல்

சென்னை: சென்னை ஐசிஎப்-ல் உள்ள எம்.அருண் விளையாட்டு அரங்கத்தில் சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஐசிஎப் பொது மேலாளர் ஏ.கே.அகர்வால் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஐசிஎப் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசுகையில், ‘12.8.2022 அன்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐசிஎப் சமீபத்தில் தயாரித்திருந்த வந்தே பாரத் விரைவு ரயில் மேம்பட்ட தொடரை பார்வையிட்டு லக்னோவில் உள்ள ரயில்வே வடிவமைப்பு மட்டும் தர மேம்பாட்டு நிறுவனத்திற்கு சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அப்போது அமைச்சர் மிக குறுகிய காலத்தில் உலகத்தரத்தில் வந்தே பாரத் ரயில் தொடரை தயாரித்தமைக்கு ஐசிஎப் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை வெகுவாக பாராட்டினார்.

விரைவில் 75 வந்தே பாரத் ரயில்களும் ஐசிஎப்பிலேயே தயாரிக்கப்பட்டு அவை நாடெங்கிலும் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார். நடப்பு ஆண்டில் (2021-22) ஐசிஎப் 3500 ரயில் பெட்டிகளை ஐம்பது விதமான வடிவமைப்புகளில் தயாரிக்க இருப்பதாக தெரிவித்தார். இந்த ஆணடில் வந்தே பாரத் ரயில்கள் மற்றும் குஜராத்தில் இந்த ஆணடு செப்டம்பரில் இயக்கப்பட உள்ள விஸ்டடோம் வடிவமைப்பிலான உணவக ரயில் பெட்டி, வந்தே பாரத் ரயில்களின் வடிவைமப்பின் அடிப்படையிலான சரக்கு ஏற்றிச் செல்லும் சக்தி ரயில் பெட்டி, நீராவி ரயில் என்ஜின் போன்ற வடிவமைப்பு கொண்ட மின்சாரத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில்களின் வடிவைமப்பின் அடிப்படையிலான பாரம்பரிய ரயில் ஆகியவற்றையும் ஐசிஎப் தயாரிக்க உள்ளது. முதல் முறையாக மகாராஷ்டிரா மெட்ரோ ரயில் நிறுவனத்திற்காக மெட்ரோ ரயில் பெட்டிகளையும், அனைத்து ரயில்பயணிகளும் குறைந்த கட்டணத்தில் குளிர்வசதி ரயில்பெட்டியில் பயணம் செய்ய உதவும் கரீப் ரத் ரயில் பெட்டிகளையும் ஐசிஎப் இந்த ஆண்டில் தயாரிக்க உள்ளது.

பல்வேறு சோதனைகளையும் தாண்டி ஐசிஎப் குழு தனது மேம்பட்ட முயற்சிகள் மற்றும் முழு ஈடுபாடு காரணமாக இந்த ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை மட்டுமன்றி வர இருக்கிற ஆண்டுகளின் இலக்குகளையும் நிச்சயமாக எட்டி சாதனை செய்யும். விளையாட்டுத் துறையை பொறுத்தவரை ஐசிஎப் விளையாட்டு வீரர்கள் ஆசிய பாடி பில்டிங் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் மற்றும் ஆசிய வாலிபால் போட்டிகளில் வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளனர். தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஐசிஎப் வீரர்கள் தடகளப் போட்டிகளில் தங்கமும் வலுதூக்கும் போட்டிகள் மற்றும் பால் பேட்மிட்டன் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளனர். அகில இந்திய ரயில்வே சாம்பியன்ஷிப் போட்டிகளில் டென்னிஸ், சதுரங்கம், பளு தூக்கும் மற்றும் வலு தூக்கும் போட்டிகளில் தங்கம் வென்றுள்ளனர்’என்றார்.

Related Stories: