தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34 சதவீதமாக உயர்வு: கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும். விடுதலைப் போராட்ட வீரர் மாதாந்திர, குடும்ப ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் 2வது முறையாக சென்னை கோட்டையில், தேசிய கொடியை ஏற்றி வைத்து, பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு விருதுகள், பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். சுதந்திர தினவிழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் 1,095 பேருக்கு மாதம்தோறும்  தியாகிகளுக்கான நிதிக் கொடையை வழங்கி வருகிறோம். அந்த வகையில், இந்திய விடுதலையின் பவள விழா நிறைவிற்கு மேலும்  சிறப்பு சேர்க்கும் சில அறிவிப்புகளைத் தற்போது வெளியிடுவதில்  பெருமையடைகிறேன்.

மாநில அரசின் இந்திய விடுதலைப் போராட்ட  வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை, ஆகஸ்ட் 15ம் நாள் முதல், ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள்,  சிவகங்கை மருதுபாண்டியர் சகோதரர்களின் வழித்தோன்றல்கள், சிவகங்கை  முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், வ.உ.சிதம்பரனார்  வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இந்திய  நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திமுக அரசு யாருக்கும்   சளைத்தது அல்ல. கடந்த ஓராண்டு காலத்தில்  விடுதலை போராட்டத் தியாகிகளை  போற்றும் ஏராளமான பணிகளைச் செய்துள்ளோம்.

மற்றுமொரு மகிழ்ச்சியான அறிவிப்பையும் இந்த இனிய தருணத்தில் வெளியிட விரும்புகிறேன். ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு  இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில்  இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 16 லட்சம் பேர் பயன்பெறுவர்.  அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,947 கோடியே 60 லட்சம் கூடுதலாகச் செலவாகும்.

தமிழக முதல்வர் என்ற வகையில் அனைத்துத் தொகுதியும் எனது தொகுதிதான். அனைத்து மக்களின் அரசாகத்தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. உலக விளையாட்டுப் போட்டியை நடத்துவது முதல், ஒரே ஒரு  இளைஞர் கூட போதைப் பொருளுக்கு அடிமையாகக் கூடாது என்பது வரை எங்கள்  முன்னால் வரும் அனைத்துக் காரியங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்துச்  செயல்படுத்தி வருகிறோம்.

இதற்கு காரணம், நான் மக்களோடு மக்களாக  வளர்ந்தவன். மக்களால் வளர்க்கப்பட்டவன். மிகச் சிறுவயதில் இருந்தே, பள்ளிப் பருவ காலத்தில் இருந்தே, அரசியல் ஈடுபாடு கொண்டு, என்னைப்  பொதுவாழ்க்கையில் ஒப்படைத்துக் கொண்டவன் நான். பொதுப்பணிகளுக்காக என்னை  ஒப்படைத்து கொண்டவன் நான்.

இன்றைக்கும் சிறு பிரச்னையாக இருந்தாலும்,சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ, அதிகாரிகளுக்கோ, முதலில் தொடர்பு கொண்டு  கேட்கும் அளவுக்கு செயல்பட்டு வருகிறேன். இயற்கை பேரிடர் எங்கு  நடந்தாலும் உடனடியாக நீண்டு காக்கும் கரம் என்னுடைய கரமாக இருக்கும்.  பதவியைப் பதவியாக இல்லாமல், பொறுப்பாக உணர்ந்து, பொறுப்போடு செயல்பட்டு  வருகிறேன்.

இந்த பொறுப்பை எனக்கு வழங்கிய தாய்த் தமிழ்நாட்டு மக்களுக்கு என்றும் நான் உண்மையாக இருப்பேன் என்பதை வானத்தை நோக்கிப்  பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியின் நிழலில் நின்று உறுதி எடுத்துக்  கொள்கிறேன். வெளிப்புற சக்திகளின் தாக்குதலை வெல்ல  வேண்டுமானால், உள்புற ஒற்றுமை என்பது மிகமிக அவசியம். இதுதான் உயிரைக் கொடுத்து இந்திய விடுதலைக்காக பாடுபட்ட உத்தமர்களுக்கு நாம் செலுத்தும்  உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

75 ஆண்டு கால விடுதலை இந்தியாவின்  வரலாற்றை, மேல் நோக்கி நகர்த்துவதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து,  ஒற்றுமை உணர்வோடு வாழ்வோம். அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற  மாநிலங்களின் மூலமாக ஒன்றிய இந்தியாவை வளப்படுத்துவோம். வேற்றுமையில்  ஒற்றுமை காண்போம். ஒற்றுமையில் மகிழ்ச்சியைக் காண்போம். மக்கள்  மகிழ்ச்சியில் மனநிறைவை அடைவோம். மக்களின் மனநிறைவே நாட்டின் வளர்ச்சி  என்பதை ஓங்கிச் சொல்வோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: