உசிலம்பட்டி அருகே ஒரு மிலிட்டரி கிராமம்; நாட்டை காக்க வீட்டிற்கு ஒரு ராணுவ வீரர்: தலைமுறை தலைமுறையாக தொடரும் வீரவரலாறு

உசிலம்பட்டி: நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் வேளையில், நாட்டை காக்க வீட்டிற்கு ஒருவரை அனுப்பியுள்ள ராணுவ கிராமம் பற்றிய தகவல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஏழுமலை அடுத்துள்ளது சங்கரலிங்கபுரம் கிராமம். சுதந்திரத்திற்காக போராட வீட்டிற்கு ஒருவர் திரண்டு வர வேண்டும் என அழைத்த நேதாஜியின் சொல்லை இன்றும் செயலாக்கி வருகின்றனர் இக்கிராமமக்கள்.

சங்கரலிங்கபுரத்தை ராணுவ கிராமம் என்றே பலரும் அழைக்கின்றனர். கிராமத்தின் உள்ளே சென்றால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள வாகனங்கள், வீடுகளின் முகப்பில், இந்த வீட்டில் ஒருவர் ராணுவத்தில் உள்ளார், பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார் என்பதை அடையாளப்படுத்தும் குறியீடுகள் காணப்படுகிறது. ஒவ்வொரு வீட்டிலும் ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பெற்ற கேடயங்களை பெருமையுடன் காட்சிப்படுத்தியுள்ளனர்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானுடன் நடைபெற்ற போரின் போது 5ம் வகுப்பு படித்திருந்தாலே போதும் என்ற அடிப்படையில் ராணுவத்திற்கு ஆட்களை சேர்த்தனர். அப்போது இக்கிராமத்தில் இருந்து சிலர் ராணுவத்தில் சேர்ந்தனர். அவர்களது ராணுவ உடை, கம்பீரம், நேர்மையை கண்ட கிராம இளைஞர்கள் அடுத்தடுத்து ராணுவத்தில் சேர்ந்தனர். இந்த ஆர்வம் பின்னர் வந்த தலைமுறை இளைஞர்களுக்கும் தொற்றிக்கொண்டது.

இதனால் ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ஒருவர் ராணுவத்திற்கு சென்றுள்ளதாக கூறுகின்றனர். தற்போது கிராமத்தில் உள்ள இளைஞர்கள் கூட ராணுவத்தில் சேர்வதற்காக இரவு பகல் பாராது உடற்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறையில் ஊருக்கு வரும் ராணுவ வீரர்கள் இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கின்றனர். ராணுவ வீரர் மாரி ராஜா கூறுகையில், ‘‘நீங்கள் ராணுவத்திற்குதான் போக வேண்டும் என பெரியவர்கள் எங்களிடம் சொல்லி சொல்லி வளர்த்தார்கள்.

இதனால் எங்கள் மனதில் சிறுவயதில் இருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. படிக்கும்போதே எனது குறிக்கோள் ராணுவம்தான் என இருந்ததால் அப்போதிருந்தே பாடி பிட்னஸ் நன்றாக வைத்துக் கொள்ள முடிந்தது’’ என்றார். சுபேதார் முனியாண்டி கூறுகையில், ‘‘எங்கள் கிராமம் ராணுவகிராமம் என பெயர் பெற்றது. ஏனென்றால் எங்கள் கிராமத்தில் இருந்து சுமார் 250 பேர் ராணுவத்திலும் ராணுவ ஓய்வும் பெற்றுள்ளனர்.

இன்னும் எங்கள் கிராமத்தில் இருந்து ராணுவ வீரராக பலரை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்’’ என்றார். முன்னாள் ராணுவ வீரர் பெத்தணன் கூறுகையில், ‘‘எங்கள் ஊரை பொறுத்தவரை ராணுவம் தான் எங்கள் உலகம். அதே போன்று தான் எங்கள் இளைஞர்களையும் வளர்த்து வருகிறோம். இரவு பகல் பார்க்காமல் ராணுவத்திற்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது பணியில் உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தற்போது ராணுவ பயிற்சி பெற்று வருகின்றனர். ஆகவே எங்கள் கிராமம் ராணுவ கிராமம் என அனைவராலும் அழைக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

Related Stories: