தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு எழுத பாஜ மாவட்ட தலைவருக்காக ஆள்மாறாட்டம் செய்தவர் கைது

திருவாரூர்: சென்னை சைதாப்பேட்டை அண்ணா சாலையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் மூலம் மாநிலம் முழுவதும் பலர் இளநிலை மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளில் படித்து வருகின்றனர். திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள திருவிக அரசு கலைக்கல்லூரியில் கடந்த மாதம் 30ம்தேதி செமஸ்டர் தேர்வு துவங்கி நடந்து வருகிறது. நேற்று மதியம் 2 மணியளவில், பி.ஏ. பொலிட்டிக்கல் சயின்ஸ் பிரிவுக்குரிய பிரின்ஸ்பல் ஆப் பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் பாடத்திற்கு தேர்வு நடைபெற்றது.

முன்னதாக தேர்வர்களின் ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டைகளை பேராசிரியர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தோட்டச்சேரி பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் ஹால்டிக்கெட்டுடன், திருவாரூர் மடப்புரத்தைச் சேர்ந்த திவாகர் (29) தேர்வு எழுத வந்திருந்தது தெரியவந்தது. அவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் தனிஅறைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டாளர் நாகரத்தினம், திருவாரூர் தாலுகா போலீசுக்கு புகார் தெரிவித்தார். போலீசார் வந்து திவாகரிடம் விசாரணை நடத்தியதில், பாஜ மாவட்ட தலைவர் பாஸ்கர் என்பவருக்காக, பாஜ கல்வி பிரிவின் மாவட்ட செயலாளர் ரமேஷ், தன்னை தேர்வு எழுதுமாறு கூறி ரூ.6 ஆயிரம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து திவாகரன் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பாஜ மாவட்ட தலைவர் பாஸ்கரனிடமும் விசாரித்ததில், தான் எந்த ஒரு தேர்வும் எழுத ஹால்டிக்கெட் பெறவில்லை என மறுத்துள்ளார்.

Related Stories: