மழலையர் பள்ளி வகுப்பறையில் கீழே தள்ளப்பட்ட சிறுமியை கண்டுகொள்ளாத ஆசிரியை; போலீசில் புகார்

அண்ணாநகர்: சென்னை நெற்குன்றத்தில் தனியாருக்கு சொந்தமான மழலையர் பள்ளி உள்ளது. இங்கு, சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். நெற்குன்றம் பாலகிருஷ்ணன் நகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் என்பவரது 3 வயது மகள் இப்பள்ளியில் படித்து வருகிறாள். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நாற்காலியில் அமர்திருந்த சிறுமியை, சக மாணவி கீழே தள்ளி விட்டுள்ளாள். அப்போது வகுப்பில் இருந்த  ஆசிரியை இதைக் கண்டு கொள்ளாமல் அலட்சியத்துடன் இருந்துள்ளார்.

பின்னர்,  வீட்டுக்கு சென்றதும், தலை வலிப்பதாக, தாயிடம் சிறுமி அழுது கொண்டே கூறினாள். இதனால், பதறிப்போன அவர், தனது மகளிடம் ’’என்ன நடந்தது’’என்று கேட்டுள்ளார். அப்போது, பள்ளியில் படிக்கும் சிறுமி தன்னை அடித்து கிழே தள்ளி விட்டதாக கூறியுள்ளாள். இந்நிலையில், அவளின் தலையில் உள்காயம் ஏற்பட்டு வீக்கம் இருந்ததை கண்டு தாயார் மிகவும் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்திடம் சரவணன் கேட்டார்.

அப்போது, பள்ளி நிர்வாகத்தினர் அலட்சியமாக பதிலளித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் சரவணன் புகார் செய்தார். அதன்பேரில்,  போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தன்ஷிகாவை ஒரு சிறுமி கீழே தள்ளி விடுவதும், அவரை தூக்கி விடாமல் அலட்சிய போக்கில் ஆசிரியை இருப்பதுமான சிசிடிவி காட்சிகள், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: