புதுப்பாக்கம் ஊராட்சியில் அட்டகாசம் செய்யும் குடிமகன்கள்; குடியிருப்புவாசிகள் அவதி

திருப்போரூர்: கேளம்பாக்கத்தை அடுத்துள்ள புதுப்பாக்கம் ஊராட்சியில் ஜஸ்ராஜ் நகர், சாய்பாபா காலனி உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியாக இருப்பதால் ஏராளமான வீட்டுமனைப் பிரிவுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகி உள்ளதால் மக்கள் தொகை பெருக்கமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஜஸ்ராஜ் நகர் பகுதியில் பகுதி நேர கூட்டுறவுக் கடை திறக்கப்பட்டது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்த கூட்டுறவு கடை திறக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த பகுதியில் உள்ள குடிமகன்கள் இந்த கூட்டுறவு கடை வளாகத்தையும், இதையொட்டிய நீர்த்தேக்க தொட்டி வளாகத்தையும் மது அருந்தும் பார் ஆக மாற்றி அட்டகாசத்தில் ஈடுபடுகின்றனர்.

இரவு நேரங்களில் வேலை முடிந்து திரும்பும் பெண்களை கிண்டல் செய்தல், வட மாநில தொழிலாளர்களிடம் பணம் பறித்தல் போன்றவற்றில் ஈடுபடு கின்றனர். இதன் காரணமாக கூட்டுறவு கடையை ஒட்டிய பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஒரு வித அச்சத்துடனே இந்த பகுதியை கடந்து செல்கின்றனர். கேளம்பாக்கம் போலீசார் அவ்வப்போது இப்பகுதியில் ரோந்தில் ஈடுபட்டாலும் இந்த குடிமகன்களின் அட்டகாசம் தொடர்கதையாக உள்ளது. ஆகவே, போலீசார் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஜஸ்ராஜ் நகர் கூட்டுறவு கடை அமைந்துள்ள பகுதியில் குடித்து விட்டு மதுபோதையில் அட்டகாசத்தில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: